பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

செம்மொழிப் புதையல்


என்கின்றான். அது கேட்ட அம்மடவார் திடுக்கிட்டு அவன் முகநோக்கினர். அவருள் தலைவியின் கூரிய பார்வை அவனுக்கு வருத்தத்தைச் செய்தது. அதனை ஓராற்றால் மறைத்துக் கொண்டு, "யான் எய்த பகழியால் புண் மிகுந்து எழுந்த துயரத்தோடு வந்த யானை யொன்றைக் கண்டீரோ” என்று கேட்கலுற்று, "நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து, எவ்வமொடு வந்த உயர் மருப் பொருத்தல் நும் புனத்துழிப் போக லுறுமோ” என்கின்றான், தன் அம்பினை "நொவ்வியற் பகழி"என்றதனால், தன் அம்பின் வன்மையும், அவளது பார்வையின் கடுமையும் சுட்டினான், “பாய்ந்தெனப் புண் கூர்ந்து"என்றதனால், அம்பு குறிவர்ய்த்து நோய் செய்ததும், தான் வேட்கையுற்று வேதனை யுற்றதும் கூறினான். "எவ்வமொடுவந்த உயர்மருப் பொருத்தல்" என்று கூறவே, சினம் மிகுந்து வாராது, புண்ணுற்றெய்திய ஆறாத்துன்பத்தால் வந்தது யானை என்றும், ஆயினும் அஃது உயர் மருப்புடைய பேர் யானையென்றும், தான் தலைவியைத் தலைக்கூட வேண்டுமென்னும் வேட்கை நோயால் வெய்துற்று வந்த செய்தியும் சுட்டியிருக்கின்றான். தான் வந்தது போல, யானையும் வந்ததுண்டோ என்றற்கு, "நும்புனத்துழிப் போகலுறுமோ” என்று வினவினான்.

இவ்வாறு கேட்டவன் நெடிது நில்லாது சிறிது நேரத்திற்குள் கழிந்தான்; அவனோடு வந்த வேட்டை நாய்கள் விலங்குகளின் நடமாட்டமறிந்து சினங்கொண்டு குரைத்துக் குதித்து ஓடத்தலைப்பட்டன. அதனால் அவனும் அவற்றின் பின்னே விரைந்தேக வேண்டியவனானான்; இன்றேல், சிறிது நெடித்தே சென்றிருப்பன். இக்கருத்தை, “சினவுக்கொள்ளுமலி செயிர்த்துப் புடையாடச் சொல்லிக்கழிந்த வல்விற்காளை” என்று குறிக்கின்றார்.

இதுகாறும் பண்டு நிகழ்ந்தது கூறிய தோழி, இனி, நிகழ்வது கூறத்தொடங்கி, தங்கள் நிலையும், தாயது நிலையும் கூறலுறுகின்றாள்:

“வல்விற்காளை, சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை.”