பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

125


அறிவாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ள வாறே யுணர்தல்" என்பது. இது மக்கள் தோன்றும்போதே உடன் தோன்றி அவரைத் தொழிற்படுத்துகின்றது. நாம் பெற்றதும் பெறுவதுமாகிய அறிவின் இயல்பினை ஆங்கிலப் பெருமக்கள் நால்வகைப்படுத்துத் தலைமை, கடைமை, இடைமை முதலிய ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கின்றனர். ஒருவன் தன் இயற்கையறிவினால் பொருளியியல்புணர்ந்து பெறுவது தலையாய அறிவு என்றும், ஏனை மக்களின் ஒழுக்கநெறிகளில் நின்றும் அவரோடு பயின்றும் அவ்வாறே பொருள்களையுணர்ந்தும் பெறுவது அதனிற் குறைந்த சிறப்பினையுடைய அறிவாமென்றும், மூன்றாவது பல நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிக்கண் மனத்தைச் செலுத்திப் பொருள்களை யாராய்ந்து தெளிந்து பெறுவதாய அறிவு என்றும், இவற்றிற் கடையாய அறிவாவது நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் கற்றதுணையே பெறுவது என்றும் கூறுவர். [1]இப்பாகுபாட்டின் கட் பொருண்மொழிகள், மூன்றாம் பகுதிக்கண் அமைந்து, உண்மையொன்றின் ஒரு சார் இயல்பினை நமக்குணர்த்தி ஏனையவற்றை ஆராயுமாறு செய்யவல்லனவாகின்றன.

இம்மூன்றாம் பகுதிக்கட்படும் அறிவு உலகில் மக்களையும் பிறபொருள்களையும் கண்டும் பழகியும் உணர்ந்தும் பெறப் படுதலால், இதனை வாழ்க்கையறிவு என்றல் பொருந்துவதாம். இது ஒருவன் நல்வாழ்க்கைக்குத் துணைசெய்யும் அறிவுப் பொருள் நிறைந்த மொழியாம். ஒருவன் கற்பதும், கற்றாரோடு பழகுவதும் எல்லாம் உலகில் நல்வாழ்வு நடாத்தி நலம் பெறுதற்-


  1. * “It has been said that our knowledge is this; that we know best, first, what we have divined by native instinct; second what we have learned by experience of men and things; third what we have learned not in books, but by books - that is, by the reflections that they suggest; fourth, last and least what we have learned in books or with masters. The virtue @f an aphorism comes under the third of these heads; it conveys a portion of a truth with such point as to set us thinking on what remains.’ - J. Morley.