பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகப்புரை
டாக்டர் அருள் நடராசன்
(உரைவேந்தர் ஒளவை அவர்களின் பெயரன்)

கால வெள்ளத்தால் கரையாதது; கல்வெட்டுகளால் நின்று நிலவுவது இயற்கைச் சீற்றங்களினால் இடருறாதது இலக்கியமேயாகும். இல்லையென்றால், காலத்தால் மூத்த திருக்குறள் இந்த ஞாலத்துக்கு இன்று வரை பயனளிப்பதாக நிலவுமா? சங்க இலக்கியங்களில் நமது வாழ்வுச் சரிதையைக் கண்டின்புறத்தான் முடியுமா? அந்த வகையில் புதையலாகத் தேடித் தொகுத்து உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள் எழுதியிருந்த கலையோவியங்களின் கலம்பகமாகச் ‘செம்மொழிப் புதையல்’ என்ற நூல் வடிவெடுத்துள்ளது.

எங்கள் மரபுக்கும் குடும்பத்துக்கும் மாறாப் புகழ் வளர்த்த எங்கள் அருமைப் பாட்டனார் உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி அவர்கள் அறுபதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பொழிலிலும், பிற இதழ்களிலும் எழுதிய கட்டுரைகள் இங்கே இப்போது தொகுக்கப்பெற்றுள்ளன. உரைவேந்தர் என் தாத்தா ஒளவை துரைசாமி அவர்கள் தமிழுக்காகவே வாழ்ந்தவர். தன்னேரிலாத தனிப்பெரும் பேராசிரியர் என்பதை உலகு நன்கறியும். கரந்தையில் தன் வாழ்வு தொடங்கிய நாள்தொட்டுக் காலையில் பயில்வது, மாலையில் எழுதுவது என்ற வரன்முறை வகுத்துக் கொண்டு இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்கள். தமிழிலக்கியங்களைப் போலவே ஆங்கிலத்திலும் பல்வேறு துறை நூல்களைத் தாம். பயின்று மகிழ்ந்ததை அறிவு, உழைப்பு, உலக வரலாறு என்றெல்லாம் கட்டுரைகளாக எழுதியிருப்பதைக் கண்டு பெருமிதமடையலாம். ‘என் கடன் தமிழ் செய்து கிடப்பதே’ என்னும் நோக்கில் அவரது வாழ்க்கை அமைந்தது. கட்டுரைகள், வரலாறுகள்

11