பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
135
 

தோன்றிய சிலவற்றைத் தாம் எழுதியுள்ள "பொன்னிலமும் மணிச்சுரங்கமும்" (Mourondge-ed-dharab, or The golden meadows, and the mines of precious stones) என்னும் உலக வரலாற்றுட் கூறுமாறு:-

"இப்பூவுலகு ஒரு தனிப்பெரும் பறவையாகும். இதன் தலையே மெக்கா, மெதினா என்னும் நகரங்கள். பாரசீகமும் இந்தியாவும் அதன் வலச்சிறகாகவும், காக் (Gog) என்ற நாடு இடச்சிறகாகவும், ஆப்பிரிக்கா அதன் வாலாகவும் அமைந்துள்ளன. இன்றையப்போது நாம் வாழும் இப்பூவுலகின் முன்பு, வேறொரு உலகிருந்தது. அதுதோன்றி ஏழாயிரம் ஆண்டுகளே இருந்தது. அதனை இப்பூப்பறவையின் குஞ்செனினும் பொருந்தும். தோன்றியிருந்த அது, இடையில் நிகழ்ந்த வெள்ளம், நிலநடுக்கம் முதலாய இடையூறுகளால் இன்னல்வாய்ப் பட்டிறந்தொழிய இது தோன்றிற்று. இங்ஙனம், பூவுலகம் தோன்றியழிதல் இயற்கையே. அவற்றிற்குரிய காலம் எழுபதினாயிரம் ஹஸரோவம் ஆகும். ஒரு ஹஸரோவமென்பது பன்னீராயிர மாண்டுகளாம்..."

இக்காலக் குறிப்பும், வரையறையும் இவர் தம்மோடிருந்த பிராமண நண்பர்களொடு கலந்து செய்ததாதல் இந்நூலாற் றெரிகிறது.

இந்நூலாசிரியரைப் பற்றிய குறிப்புக்கள்:- இவரது தந்தை ஆல்கான்; அவர் தந்தை அலியென்பார்; அவர் தந்தை அப்துர் ரஹிமான்; அவர் தந்தை அப்துல்லா; அவர் தந்தை மசௌடல் அதெலி. இவரை யாவரும் மசௌடி யெனவே யழைப்பர். பிறகு இவரது அறிவைகுறித்து, இவர்க்குக் “குத்புதீன்" என்னும் பட்டமும் அக்காலத்தார் அளித்தனர். எனினும், இவர் அப்பட்டப் பெருமையையும் கருதாது லாஹேப் அர்ரசௌ (பரம்பொருளின் தூதனுடைய தோழன்) என்னு மொருதாழ்வான (அக்காலத்தார் கருத்து) பட்டத்தையே யேற்றனர்.

நூற்குறிப்பு:-

இது உலகின் தோற்ற முதல் இந்நூல் எழுதியகாலம் வரையிற் கூறும் வரலாறாகும். இவரது காலம் மோதிபில்லாவின் கிலாபத் காலம். அதாவது ஹிஜிரா 336.