பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. ஊழ்வினை

திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் படிப்பதில் இந்நாளைய நன்மக்கட்குப் பேரீடுபாடு உண்டாகியிருக்கிறது. அரசியலறிஞர் முதல் பள்ளிச் சிறார்கள் ஈறாக அனைவரும் இந்நெறியில் ஒத்த கருத்துடையராக இருக்கின்றனர். உலகிற்கே நல்லறமுரைத்த வள்ளுவர்பால் மக்கட்கு நன்மதிப்பு உண்டாகியிருப்பது நல்வாழ்வுக்கு அறிகுறி. நினைவு, மொழி, செயல் என்ற மூன்று துறையிலும் உரிமை திகழ மக்கள் வாழ்ந்த காலம் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் வழங்கிய காலம்; அத்தகைய காலம் இப்போது வந்திருப்பதால், மக்கட்குத் திருவள்ளுவரிடத்தே இத்துணையீடுபாடு தோன்றிய தெனலாம்.

இதற்கு முன்னெல்லாம், நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் இந்நாட்டில் வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும் பிற நாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால் வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப்பருவத்தே, தாய் தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையைமாற்றினர்; தமிழ்க் கல்வியைத் தூற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண் மையைக் கைதுவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல "நாமமது தமிழரெனக் கொண்டு" உயிர் வாழ்ந்தனர். “தாய் நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றி விட்டதே இந்த அந்நிய மொழிக் கல்வி" யென அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை.

இவ்வாறு உண்டாகிய மன மாசு இன்னும் நீங்கவில்லை; அடிமையுணர்வு அகலவில்லை; சென்ற இருநூறு ஆண்டுகளாக மெல்ல மெல்ல உடையைப்பற்றி, உடலைப்பற்றி, உதிரத்தைப்