பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144
செம்மொழிப் புதையல்
 

காண்போம். நம் நாட்டு மக்கள் வாழ்வில், பேச்சில், செயலில் சில அடிப்படைக் கருத்துகள் உண்டு. இவற்றுள் சிறப்பாக மூன்றைக் காணலாம். அவை வினை, மறுபிறப்பு, மேலுலக கீழுலக வாழ்வு ஆகிய மூன்றுமாகும்.

"இருள்சேர் இருவினையுஞ் சேரா" "எனைப்பகை யுற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின் சென்றடும்" என்றும், "எழு பிறப்பும் தீயவை தீண்டா" "எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்," "இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேமா" என்றும், "மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று," "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கழுந்தும் அளறு” என்றும் வருவன இவ்வடிப்படைக் கருத்துகளை எடுத்தோதுகின்றன.

இம் மூன்றனுள் வினையே மறுப்பிறப்புக்கும் மேலுலக கீழுலக வாழ்வுக்கும் காரணம்; நல்வினை செய்தார் மறுபிறப்பில் மேலுலக வாழ்வு பெறுவர் தீவினை செய்தார் மறுபிறப்பிற் கீழுலகடைந்து துன்புறுவர். நலந்தீங்கு கலந்த வினை செய்தார் பிறப்புகளை யெய்துவர். இக்கருத்துகளையும் நாம் இத்திருக்குறளிலேயே காணலாம். ஆகவே, வினையால் மறுபிறப்புற்று, மேலும், கீழும், நடுவுமாகிய உலக வாழ்வுகளில் பிறந்து உழலுவதை விடுத்து வினையின் நீங்கிப் பிறப்பறுத்து வீட்டுலகம் சென்று சேர்வதே வாழ்வின் குறிக்கோளாகும். வீட்டுலகத்தைத் திருவள்ளுவர் "வானோர்க்கு உயர்ந்த உலகம்" என்றும், “வரன் என்னும் வைப்பு" என்றும், “இறைவன் அடி” என்றும் கூறுகின்றார். மேலுலகத்தைப் "புத்தேளுலகம்" “தாமரைக்கண்ணான் உலகு" "மேலுலகம்" என்று, சிறப்பித்துரைப்பர். இவற்றையெல்லாம் நோக்கினால் மேல் கீழ் நடு எனப்படும் மூவகை யுலகங்களின் வாழ்வு வினை காரணமாக உண்டாவன என்பது இனிது விளங்குகிறது.

இவ்வினையுணர்வும் மறுபிறப்புணர்வும் பிறவும் திருவள்ளுவரே படைத்து மொழிவன அல்ல. அவர்க்கு முன்னிருந்த சான்றோர்களே கூறியிருக்கின்றனர். "வாழச்செய்த நல்வினையில்லது, ஆழுங்காலைப்புணை பிறிதில்லை” (புறம்) யாம்செய் தொல்வினைக்கெவன் பேதுற்றனை" (நற்) என வினையுணர்வும், "சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்