பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
செம்மொழிப் புதையல்
 

யுணர்ந்து மேற்கொண்டனர். பிரமப் பொருள் ஒன்றேயுளது; ஏனை உலகம் உயிர் என்பன பொய்யென்று கொண்ட பிரம வாதிகளும், விவகார மென ஒரு நிலை வகுத்து அதன்கண் இம்மூன்றும் உண்டெனக் கொண்டு சமயப்பணி புரிந்தனர். இம்மூன்றனுள் இறைவன் உயிர் என்ற இரண்டும் அறிவுடைப் பொருள் என்றும் பிறவெல்லாம் அறிவில்லாதவையென்றும் கூறுவர். வினையும், வினைப்பயனும் வாதனையும் ஆகியயாவும் அறிவில்லாதவை.

அறிவில்லாத வினைப்பயன் அறிவில்லாதவாதனையைப்பற்றுக் கோடாகக் கொள்வதும், இன்பமும், துன்பமுமாகிய வினைப்பயன்களை உயிர்கட்கு நல்குவதும் கூடா. அறிவுடைய உயிரை அறிவில்லாத வினைப்பயன்கள் வந்து எய்துவதற்கு அறிவுடைய இறைவன் வேண்டப்படுகின்றான். அவன் உலகைப்படைத்து அவரவர் செய்த வினைப் பயன்களை அவரவரோடு கூட்டி நுகரச்செய்வதும் அந்த இறைவன் வேலை என்று கண்டனர். அது பற்றியே தொல்காப்பியரும் கடவுளைப் "பால்வரை தெய்வம்” என்றார். உலகுயிர்களைக் கடந்து நிற்கும் நிலையில் இறைவனைக் "கடவுள்" என்றும், அவற்றோடு தொடர்புற்று நிற்கும் நிலையில் "தெய்வம்" என்றும் தொல்காப்பியரை யுள்ளிட்ட தமிழ் நூலார் கூறினர்.

இனி வடநூலாருள் யோக சமயத்தார் இவ்வினைகளைச் சுக்கில கன்மம், கிருஷ்ண கன்மம், சுக்கில கிருஷ்ண கன்மம், அசுக்கில கிருஷ்ண கன்மம் என நால்வகைப்படுத்திக் கூறுவர். சுக்கில கன்மம் நல்வினை; கிருஷ்ண கன்மம் தீவினை; இரண்டுமிலாத வினை அசுக்கில கிருஷ்ண கன்மம். இறுதியிற் கூறிய அசுக்கில கிருஷ்ண கன்மத்தையே செய்பவன் வீடு பெறுபவன் என்பதும் அவன் அது செய்வதால் அவனுடைய புத்தி தத்துவத்திற்கிடந்து அவனையடைவதற்குப் பக்குவ முற்றுவரும் முன்னைவினைகள் (அவாவென்று தமிழில் கூறப்படும்) வாதனையாகிய பற்றுக்கோடு இல்லாமையால் கெட்டுப்போம் என்பதும் யோகநூலார் கொள்கை.*


* வியாசபாடியமும் தத்துவ வைசாரதியும் IV-17