பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

149


ஒரு மனிதனுடைய நினைவு, சொல், செயல்களால் கன்மமென்னும் நுண்ணிய பொருள் உண்டாகிறது. அவனுடைய விருப்பு வெறுப்புகள் பசைபோல் ஊறி அக்கன்மத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு சீவ பதார்த்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு, பல பிறவிகளிலும் ஈட்டப்படும் கன்மம் சீவனைச் சூழ்ந்துகொண்டு கன்ம சரீரமாகிறது. பிறப்பு மாறுங்கால் சீவன் கன்ம சரீரத்தோடே நீங்கும் இன்ப துன்பங்களை ஒப்ப நோக்கி நுகரும் மேலோர்க்கு அக்கன்மம் முதிர்ந்து உதிர்ந்தொழியும்; அல்லாதவர்.பால் அக்கன்மம் பெருகி வெண்மை கருமை முதலிய "இலேசியம்" பெறும். ஐவகைச் சீலங்களிலும் சிறிதும் பிழையின்றி யொழுகும் சான்றோர் புதிய கன்மங்களைச் செய்யாமையால் முன்னைக் கன்ம பலங்கள் முற்றும் நுகர்ந்து கழிந்தபின் உடம்பின் நீங்கி உலகத்து உச்சியில் வாழும் வீடுபெற்று முத்தர்களோடு கூடி இன்புறுவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. புத்த சமயம் ஆன்மா உண்டென்பதை மேற்கொள்ளா தொழியினும் வினையும், மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகுகிறது. யோகர்கள் போலப் புத்தர்களும் வினையை நலம் பயப்பன, தீங்கு பயப்பன, இரண்டும் பயவாதன என நால்வகைப்படுத்து இறுதியிற் கூறிய வினைவகையால் ஏனை வினைகளெல்லாம் கெடும் என்பர்* வினைகட்கெல்லாம் இச்சையே காரணம். இச்சையை நீக்கியவன், அறியாமை வெறுப்பு ஆசை முதலியவற்றைக் கெடுத்துப் பிறப்பறவுயரும் பெரியோனாவன். அவன் முன்னை வினைப்பயன்களை மட்டில் இப்பிறப்பில் நுகர்வான். அவன் வினைத் தொடர்பால் கீழ்நிலை எய்தான். அவன் அருக பதம் பெற்ற பரமேட்டி எனவுரைக்கின்றனர்.

இவ்வண்ணம் நம் நாட்டில் தோன்றிய சமயங்கள் பலவும் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டுள்ளனவாயினும் உலோகாயதம் ஒன்றுதான் இவற்றைக் கொள்ளவில்லை. உலகாயதருள்ளும் சுசிட்சித சாருவாகர் என்போர் ஆன்மா என ஒன்று உண்டெனக்கொண்டு அதுவும் இறக்குங்கால் உடம்போடே அழிந்துவிடுகிற தென்பர். ஆசீவகருள் வினையும் மறு பிறப்பும் பிறவுமாகிய கொள்கைகளை ஏற்பதிலர்.


* அத்தி சாலினி பக். 89.