பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

151


பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியால் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெளிந்து, "ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றனர். ஊழையும் ஊழ்க்காது கெடும் என அதன் வினையால் கூறாமல், ஊழையும் ஊழ்க்காவாறு இடையூறு செய்வர் என்பது தோன்ற, உப்பக்கம் காண்பர் என்று ஆசிரியர் கூறுவது நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஒடுவதை இயற்கை யறமாகக் கொண்டதண்ணீரும் இடை நிகழ்த்தும் தடையால், நின்று வற்றுதல்போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர்கட்கு இயல்வதொன்றாயிற்று. ஆகவே, ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்தும் நல்குவதில் பெருவலி இயற்கை யறமாக வுடையதென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின. இது பற்றியே,

“சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.”

என்ற திருக்குறளும் தோன்றுவதாயிற்று. சான்றோரும் வினை பெருவலியுடையதாயினும், வெல்லத்தக்கது; கெடுத்தற்குரியது என்றெல்லாம் பேசுவராயினர்.

(அருந்தமிழ் உரைவளங்கண்ட பெருந்தமிழ்ப் பேராசிரியர் ஒளவை அவர்கள் இற்றைக்கு முப்பது ஆண்டுகட்கு முன்னர் பன்னெறிச் சமயப் பனுவல்களில் தோய்ந்த நிலையில், மணிமேகலைக்கு உரைகண்ட திளைப்பில் திகழ்ந்தபோது இக் கட்டுரை எழுதினார். 1954-ஆம் ஆண்டு மயிலம் திருப்பெருந்திரு சிவஞான பாலய சுவாமிகள் மணி விழா மலரில் வெளிவந்த இக் கட்டுரையைப் பேராசிரியரது நான்காம் ஆண்டு நினைவாக வெளியிட்டுப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்.)