பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது11. தமிழ் மகளிர்

ண்டை நாளைத் தமிழகத்தில் மகளிரது நிலைமையை அறிந்துகொள்வது மிகவும் நன்று. மக்கட் படைப்பில் ஆடவர் பெண்டிர் என்ற இருபாலார்க்கும் உடலமைப்பில் சிறிது வேறுபாடு உண்டேயன்றி நினைவு, சொல், செயல், அறிவு என்ற கூறுகளில் வேற்றுமை கிடையாது. உடலமைப்பு வேறுபாடு மக்கட் பேற்றுக்கும் மக்களினப் பெருக்கத்துக்கும் ஏற்ற வகையில் துணைபுரிகின்றது. அதனால் உலகியல் வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் ஒன்றற்கொன்று இன்றியமையாத் துணையாதலை நாம் காண்கின்றோம். புறத்தே சென்று வாழ்க்கைக்கு வேண்டும் உண்டி, உறையுள் முதலியன நாடி நல்கும் வகையில் ஆடவர் சிறந்து நிற்றலின் அவரது உடற்கூறு ஏனைப் பெண்டிரது உடலினும் வலி மிக்கதாகின்றது. மகப் பெறுதலும் அவற்றை வளர்த்தலும் ஆகிய செயல்வகைகளில் பெண் மகளிர் ஆடவரது துணைமையைப் பெரிதும் நாடுதலின் ஆடவர்நிலை சிறிது உயர்வதாயிற்று. இன்னோரன்ன காரணங்களால் மக்களுலகில் பெண்டிரது நிலை சிறிது அடங்கிய தன்மைத்தாக உளது. இந்த நிலைமையினைப் பழங்கால மக்களில் சிலர் நன்கு உணர்ந்து கொண்டு மகளிரைத் தங்கள் நலனுக்காகப் படைக்கப்பட்டவரெனக் கருதி ஒழுகினர்.

நம் தமிழகம் பண்டை நாளில் பிற நாடுகளோடு தொடர்புற்று, வாணிகம் முதலிய துறைகளில் சிறந்து விளங்கியபோது, மேலை நாடுகளில் கிரேக்கரும் யவனரும் எகிப்தியரும் பாரிசேயரும் பாபிலோனியரும் பிறரும் மதிப்புடைய நாகரிகம் கொண்டு விளங்கினர்; அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளும் அரசியல் நெறி முறைகளும் அறிவுரைகளும் இன்றும் மேனாட்டவரால் பாராட்டப்படும் தகுதி படைத்துள்ளன. அவர்களுடைய வாழ்வில், மகளிர் நிலை ஆடவர்க்கு அடிப்பணி புரியும் துறையிலேயே இருந்தது.