பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
161
 

துன்புறுத்துமாறு அவளை அவற்றிற்கு இரையாக்க வேண்டுமென்றும், தன் கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின் அவள் மூன்று திங்கட்கு உயரிய ஆடையணிகலனின்று வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது. கணவன் சொல்வழியடங்கியொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம் என யாஞ்ஞவல்கியர் இயம்புகின்றார். கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அடிகளையோ உடல் முழுவதுமோ நீராட்டி அந் நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாளும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவாள் எனவும் அத்திரி யென்பார் அறிவிக்கின்றார். மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லையாகலான், கணவனுக்கு அடங்காதொழுகுபவள் இறந்தால் இன்பவுலகு எய்தாள்: எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும் என்று வாசிட்டநூல் வற்புறுத்துகின்றது. கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உண்வு தரப்பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள் என ஆங்கீரசர் கடிகின்றார்.

மேலை நாட்டவரைப் போல நம் நாட்டு வட மொழியாளரும் மகளிரை உடைமைப் பொருளாகவே கருதினர். ஏனைப் பொருள்களைப் போல மகளிரையும் சூதாடு பணையமாகவும், விற்கவும் ஒற்றிவைக்கவும் கூடிய பொருளாகவும் மதித்தொழுகினர். இதற்கு இதிகாசங்களும் புராணங்களும் மிகப் பல செய்திகளைச் சான்று காட்டுகின்றன. உயிர்க்கு இறுதி நேரும் காலத்தாயின், சான்றோர் இழிக்கத்தக்க செயல்களைச் செய்தாயினும் உயிர் உய்தல் வேண்டும் என்பது அந்நாளைய அறமாகலின், அந் நிலையில் மகளிர் அறமல்லன. செய்யினும் அவர் விலக்கப்படார். மணமான மகளிர்க்குப் பதி விரதமே சிறந்த அறம். தன் கணவனையன்றிப் பிறர் தம்மைத் தொடினும் தம்பாற்படினும் தம்மை விரும்பினும்,

செ-11