பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

செம்மொழிப் புதையல்


மனைவியாவாள் அவர்களை மனத்தால் விரும்பாமையே பதிவிரதத்தின் பண்பு. கணவன், ஆண்மையிழப்பினும் அறிவு திறம்பினும் வேறு நாடேகினும் பெருநோய் எய்தினும் மனைவியாயினாள் வேறோர் ஆடவனை மணந்துகொள்ளலாம். கொண்ட கொழுநன் குடிவழி யெஞ்சும் நிலையில் மனைவி வேறொருவனைக் கூடி மகப் பெறுவது குற்றமின்று என்றொரு கொள்கை பண்டை நாளில் இருந்தமைக்கு இதிகாசமாகிய பாரதம் ஏற்ற வரலாறொன்றைச் சான்று கூறுகிறது.

இனி, மேலைநாட்டு ஆங்கிலரிடையே மகளிர் இருந்த நிலையை நோக்கின் அஃது ஏனை மேலை நாடுகளினின்று வேறுபட்டதாகத் தோன்றவில்லை. அரசியல் வாழ்வில் அரச மகளிர்மட்டில் அரசிகளாக முடி சூடிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். கிறித்து சமயம் பரவிய பின்பே அந்நாட்டில் ஒருவன் பல மகளிரை மணக்கும் இயல்பு நீங்குவதாயிற்று. நெடுங்காலம் வரையில் மகளிர்க்கு அந்நாட்டவர் கல்வி நல்கவில்லை. சமயத்துறையில் தாபத மகளிர்க்கு லத்தீன் மொழி கற்பிக்கப் பெற்றமையின், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே தாபத மகளிர் சிலர் லத்தீன் மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்தனர். ஏனை யாவரும் மகளிர்க்கு மணமும் மகப்பேறுமே வேண்டப்படுவன என்ற கொள்கையிலே ஊன்றி நின்றனர். மணமாகுமுன் ஒருத்திக் கிருக்கும் உரிமை முற்றும் மணத்திற்குப் பின் அவளுடைய கணவன்பால் சேர்ந்து ஒன்றிவிட்டன. மக்களைப் பேணுதல் கல்வி கற்பித்தல் முதலியன பற்றிய உரிமைகள் தந்தையிடமே இருந்தொழிந்தன. வரலாற்றுக் காலம்தொட்டு ஆங்கில நாட்டவரிடையே கணவற்கு வேறாக மகளிர்க்கு எவ்வகைச் சொத்துரிமையும் இல்லாமலே இருந்து வந்தது; கி.பி. 1882-இல் தான் மகளிர்க்குச் சொத்தில் உரிமை வழங்கப் பெற்றது. அரசாளும் வேந்தன் மக்களுள் மகளிர்க்கு அரசியல் உரிமை பண்டையிருந்தது; ஆயினும் அம் மக்களுள் ஆண் மக்கள் இருப்பின், அவர்க்கே முதலுரிமை நிலவிற்று. சென்ற 1918-இல் தான் மகளிர்க்கு வாக்குரிமை வழங்கினர்; அதன் பிறகே ஆங்கில மகளிர் பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றனர். அமெரிக்கர் 1920-இல் அவ்வுரிமையை மகளிர்க்கு வழங்கினர். உயரிய கல்வியும் கலையும் பெறுதற்கேற்ற வாய்ப்பும் ஆங்கில