பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

163


நாட்டு மகளிர்க்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் உண்டாயிற்று. இவர்களையெல்லாம் நோக்கின் பண்டை நாளைத் தமிழ் மகளிரின் நிலை பெரிதும் வியத்தற்குரியதாக விளங்குகிறது.

பழந் தமிழ் மக்களிடையே ஆடவர், பெண்டிர் என்ற இருபாலார்க்கும் பிறப்பு, அறிவு, ஒழுக்கம் முதலிய கூறுகளில் வேற்றுமை காணப்படவில்லை. ஆண் மக்களை யொப்பவே பெண்மக்களும் பேணப்பட்டுள்ளனர். கூர்த்த அறிவுடைமையே மக்களில் வேற்றுமை காட்டிநின்றது. திருவள்ளுவரும் அறிவறிந்த மக்கட் பேற்றையே சிறந்த பேறாக எடுத்துரைக்கின்றார். அதற்குக் காரணம், ஆணாயினும் பெண்ணாயினும், மக்கள் தம்மினும் மிக்க அறிவுநலம் உடையராயினும் உலகிலுள்ள மன்னுயிர்க்கெல்லாம் வாழ்வு இனிதாம் என்பது கருத்து. அதனால் ஆடவர் பெண்டிர் இருபாலாரும் திருந்திய கல்வி பெறுவதில் வேறுபாடின்றியொழுகினர். புெண் மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர் “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான என்று தெரிவிக்கின்றார். கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவொழுக்கம் கற்பு என்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், “உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை” என்றும், வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர், அவற்றை “எழுதாக் கற்பு” என்றும் குறிப்பதே இப்பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும். மகளிர்க்குக் கல்வியறிவின் திணிநிலை யொழுக்கத்தைக் கற்பெனவாள ஓதாமல், “செயிர்தீர் காட்சிக் கற்பு” என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர். மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற்றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின் ஆணுக்கு உரிமைதந்து பெண்