பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

செம்மொழிப் புதையல்


அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது. ஆண் மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்தபோது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,

“விளையாடு ஆயமோடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்.”

என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தகுவதாம். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது இருவரும் கூடியே அதனைச் செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கினர். அவளது துணைமையின் சிறப்புணர்ந்து மேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.

பழந்தமிழர் குடியில் கல்விப் பேற்றில் ஆணும் பெண்ணும் ஒத்த உரிமை பெற்றுள்ளனர். மண்ணாளும் வேந்தர்க்குரிய நீதி நன்னூல் பலவும் பெண்களும் கற்றிருந்தனர். பிறந்த குடியின் பெருமையையும் புகுந்த குடியின் தொல்வரவையும் மகளிர் நன்குணர்ந்து குடிப்பெருமை குன்றாத வகையில் வாழ்க்கையை நடத்துகின்றனர். கணவனும் மனைவியும் உலகியல் வாழ்க்கைக்கு ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் துணை வராதலின், கணவன்பால் காணப்படும் குறையை மகளிரும் மகளிரது குறையைக் கணவனும் நன்கு உணர்ந்து குணம் பேணி வாழ்கின்றனர். கணவன்பால் பிழை காணுமிடத்து அன்புடைய நன்மொழிகளால் தாய் போல் கழறிக்கூறி நீக்கியும், நலம் காணுமிடத்து மகிழ்ச்சி கூர்ந்தும், மகளிர் நடந்து கொள்வது சிறந்த அறமாகக் கருதப்படுகிறது. ‘தாய் போற் கழறித் தழி இக்கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப’ எனத் தொல்காப்பியனார் சுட்டிக் காட்டுகின்றார். கொண்ட கணவன்பால் ஒருகால் பிழை தோன்றக் கண்ட அவன் மனைவி தீவிய இனிய கூரிய சொற்களால் அவனைக் கழறினாளாக, அதனால் அவன் நெஞ்சு வருந்தினான்; அந் நிலையில் அவ்-