பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

173


என்ற சொல் மிகுதியென்று பொருள்தருவது. இம்மகளிர் உலகில் வாழ்தற்குரியராதலால், அவரது வாழ்வுக்கு வேண்டுவன உதவுவது ஆண்மையுடைய ஆடவர்க்கு அறமாகும். அவ்வாறு உதவுமிடத்தும் உதவி பெறுமிடத்தும் இருதிறத்தார்க்கும் தொடர்புண்டாக, அதன் வழியாகத் தோன்றிய மகளிர் பரத்தையராய்ப் பெருகினர். ஒருவன் ஒருத்தியை மணந்து வாழ்ந்து வருங்கால் அவள்பால் மகப்பேறு இல்லையாயின் வேறொருத்தியை மணந்து கொள்வது அவர்க்கு அமைவதாயிற்று. இரண்டாம் மனைவியைப் ‘பின் முறையாக்கிய பெரும் பொருள் வதுவை’ என்று தொல்காப்பியர் குறிக்கின்றார். இருவர்க்கு மேலும் மனைவியர் உளராயின் அவரைக் காமக் கிழத்தியரென வகுத்து முறை செய்தனர் பண்டைத் தமிழர். நாளும் பெருகிவந்த மிகை, மகளிர் தாம் இனிது வாழ்தற்குரிய பொருள் வேண்டி ஆடல் பாடல் அழகு என்ற துறைகளில் பயிற்சி பெறத் தொடங்கினர். அவருள் பொருள் ஒன்றே கருதி அதனைத் தருவோர் யாவராயினும் வரையறையின்றித் தமது பெண்மையை விற்று ஒழுகினோர் வரைவில் மகளிராகக் கருதப்பட்டனர். எஞ்சிய பரத்தையர் தம்மை நயந்த ஆடவனது காதலன்பு ஒன்றே குறிக்கொண்டு ஒழுகினமையின் அவரைக் காதற்பரத்தைய ரெனப் பிற்காலத்தார் பெயர்குறித்தனர். அவரைச் சில ஆட்வர் தாம் உறையும் ஊரகத்தே இருத்தி மனைவியரைப் போலப் பேணினர். அவ்வாறு பேணப்பட்டோர் இற்பரத்தையர் எனப் படுவராயினர். ஏனையோர் பரத்தையர் சேரிக்கண் உறைந்தமையின் அவரைச்சேரிப் பரத்தையரெனவும் பரத்தையர் எனவும் உரைத்தனர். இற்பரத்தையர் காப்பியக் காலத்தில் உரிமை மகளிரெனவும் குறிக்கப்பட்டனர். இவ்வகையில் தமிழ் மகளிர் பண்டை நாளில் குலமகளிரெனவும் பரத்தையரெனவும் இருகூறாய் இருந்தமை தெளியப்படும்.

ஒருவன் மனைவியான குலமகள் வயிற்றில் பிறக்கும் மக்களுக்கே அவனது உடைமையில் உரிமையுண்டு; பரத்தையர்க்குப் பிறக்கும் மக்கட்கு அவ்வுரிமை இல்லை. இதனை,

“யாணர் ஊரநின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்