பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

175


விளக்கேற்றி"த் தமது கடமையை ஆற்றினார் என்பது வரலாறு. இதனால், ஊர்வாரியங்களில் தலைமை தாங்கும் உரிமை மகளிர்க்கும் வழங்கப்பட்டிருந்தது தெளிவாகிறதன்றோ?

இந் நிலையில் மேலைநாட்டு ஆங்கிலேயரும் பிறரும் அமெரிக்க நாட்டவரும் இந்த நூற்றாண்டில்தான் மகளிர்க்கு அரசியல் உரிமை தந்தனர். இதை நோக்கின் பழந்தமிழ் மகளிர் ஏனை உலக நாடுகளில் வாழ்ந்த மகளிரை நோக்க - மிக உயர்ந்த நிலையில் வைத்துத் தமிழரால் மதிக்கப் பெற்றமை, இதனால் இனிது விளங்கும். இன்னோரன்ன செய்திகளை மறந்தமையால் இடைக்காலத் தமிழ்மக்கள் மகளிரை அடிமையாக்கி இருளில் கிடத்தித் தம்மையும் குருடராகவும் ஊமையாகவும் செவிடராகவும் கெடுத்துக் கொண்டனர். தமது நாடு, மொழி முதலியவற்றின் வரலாறு துறந்து மறந்து கெடும் ஒரு சமுதாயம் நாளடைவில் கெட்டு அடிமைச் சேற்றில் அழுந்தும் என்பதற்கு இன்றைய தமிழ்ச் சமுதாயம் தக்கதொரு எடுத்துக்காட்டாக விளங்குவதைத் தமிழகம் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்வு தமிழ் வாழ்வு தழைப்பதற்கு ஆக்கமும் அரணுமாம் என்பது உறுதி.