பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

177



இப்பழமொழிகள் நுட்பமும் சுருக்கமும் எளிமையுமாகிய இனிய நலங்களை யுடையவாகும். இவைகளைக் கண்ட தொல்காப்பியர் இவைகளையும் செய்யுள் வகையில் ஒன்றாக எடுத்து நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் என்றிவை விளங்கத்தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு “வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப," என்று இலக்கணம் கூறியுள்ளார். மேலும் அவர் "முதுமொழி என்ப," என்றதனால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே சான்றோர்கள் இந்த முதுமொழிகளைக் கண்டு பாராட்டியிருக்கின்றனர் என்று அறியலாம்.

இந்தப் பழமொழிகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பவை. இவற்றில் பொய்யோ, புனைந்துரையோ கிடையா. அழகிய சொல்லாட்சியும் பிறிதுமொழிதல் முதலிய அணிநலமும் இவற்றின் தனிச்சிறப்பாகும். ஒருவர் வேறொரு, வரைக் கேட்டு யாதேனும் ஒன்றைக் கடனாக வாங்குகிறபோது முகம் ஒருவாறு மகிழ்ச்சியாகவும், அதையே கொடுத்தவர் கேட்டு வாங்கும்போது தருபவர் முகம் ஒருவாறு வேறுபட்டும் இருப்பதும் உண்மை நிகழ்ச்சியாம். இதுவே “கேட்கிறபோது பசப்பு, கொடுக்கிறபோது கசப்போ," என்ற பழமொழியாக வழங்குகின்றது. இதனை இப்போதும் காண்கின்றோம். 2000 ஆண்டுகட்கு முன்பு விளங்கியிருந்த பாலை பாடிய பெருங் கடுங்கோ என்பவர் "உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம், கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல், பண்டும் இவ்வுலகத் தியற்கை அஃது இன்றும், புதுவதன்றே புலனுடை மாந்தீர்," (கலி) என்று பாடியுள்ளார்.

இந்த முதுமொழிகளிடத்தே உண்மையும் தெளிவும் இருப்பதுகொண்டே சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு முன்றுரை யரையனார் என்ற சான்றோர் ஒருவர் 400 பழமொழிகளை எடுத்து ஒவ்வொன்றின் கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் வைத்துப் பழமொழி நானூறு என்ற பெயர்வைத்து ஒரு நூல் பாடியிருக்கின்றார். அது பதினெண் கீழ்க்கணக்கு என்ற நீதிநூல் தொகையில் ஒன்றாய் இருக்கிறது. மேலும், இப்பழமொழிகள் மக்களுடைய சமுதாயம், பொருளாதாரம், வாணிகம், கைத் தொழில், சமயம், கல்வி, அரசியல் முதலிய பல துறைகளிலும் அமைந்திருக்கின்றன. "குலங்கெட்டவரோடு சம்பந்தம்