பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184
செம்மொழிப் புதையல்
 

இப்படி விழாக்கள் நடத்த இயலுகின்றது ஏன்? என்று நினைப்பது இல்லை. செய்யும் வாணிகத்தில் உயர்ச்சி யுண்டானால் "நல்ல காலம்" என்றும், "நல்ல யோகம்" என்றும், வீழ்ச்சி யுண்டானால் "திசை கெட்டுப் போயிற்று," "கிரகம் சரியா யில்லை" என்றும் சொல்லிப் பழி பாவங்களைக் காலத்தின் மேலும் கிரகங்களின் மேலும் தள்ளிவிட்டுத் தாம் குற்றமற்றவர்களாகக் கருதிக்கொள்வது இயல்பாக் இருக்கிறது. விதியென்றும், வினை யென்றும், கருமம் என்றும் சொல்லிக் கொள்வது பெருவழக்கு, விதிவினைகளின்மேல் பழிபோட்டுக் கெடுகின்றவருக்கு நமது பெரியோர்கள் நல்ல அறிவுரையும் சொல்லியுள்ளார்கள்; செய்யும் தொழிலில் விதி வினைகள் குறுக்கிட்டாலும் நாம் நமது உழைப்பாலும் அறிவு வன்மையாலும் வென்று விடலாம் என்று நம் முன்னோர் நன்றாக அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அப்படியிருந்தும் மிகப்பலர் தெளிவில்லாமல் “ஐயோ, வினையே" என்று அழுவதும், அதற்காக நவக்கிரகங்களுக்கு வழிபாடு செய்வதும் மேற்கொண்டு அவதிப்படுகின்றார்கள். அவர்களுக்குத் திருஞான சம்பந்தர் முதலியோர் அறிவுறுத்த உரை செவியில் ஏறுவதில்லை; தெளிவில்லாத சோதிடரும் திறமையில்லாத கோயில் பூசாரியும் சொல்லுவதுதான் நல்ல அறிவுரையாக விளங்குகிறது. வணிகர் சமுதாயத்தில் இந்த இழிவானநிலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று? என்பன போன்ற ஐயங்கள் இப்பொழுது எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்தால் அது பாரதமாய் விரியும்.

வாணிகத்தின் கீழ்நிலைக்குக் காரணமாக ஒன்றைமாத்திரம் இப்போது தெளிவாகக் கூறலாம். வாணிகம் என்பது மக்கட் சமுதாயத்துக்குச் செய்யும் சிறந்த தொண்டு என்பது மேனாட்டவர் கொள்கை. நம் நாட்டவர் அதனை ஒரு சூதாட்டமென்று கருதுகின்றார்கள், பெருத்த நிலையில் வாணிகம் செய்து ஒருவர் கெட்டுவிடுவாரானால் ‘சூதாட்டத்தில் எப்படி வெற்றிதோல்விகள் நிலையில்லையோ அப்படியே வாணிபத்திலும் இலாப நட்டங்கள் நிலையில்லை" என்று சொல்வது வழக்கமாக இருப்பது யாவருக்கும் தெரிந்த செய்தி, வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எக்காலத்தில் சொன்னானோ தெரியவில்லை. அந்தப் படுபாவியின் சொல்லால் நமது நாடு வாணிகவுலகில் மதிப்பிழந்து போயிற்று.