பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

செம்மொழிப் புதையல்


இப்படிச்செய்து பழகிய மோசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் பெருவாரியாகப் புகுந்து வெளி நாட்டவர் இகழ்ந்து வெறுத்துத் தள்ளுதற்குரிய அவகேட்டை விளைவித்திருக்கிறது. பொருள் துறையில் படிப்படியாக முன்னேற முயன்றுகொண்டிருக்கும் நமது நாட்டுக்கு இந்த இழிசெயல் பெருத்த தீங்கை உண்டுபண்ணி வருவதை நமது நாட்டு வணிகர்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை; சமுதாயத்துக்கு இதனால் எவ்வளவு பெரிய துரோகம் செய்யப்படுகிறது என்பதும் அவர்கள் அறிவுக்கு எட்டியதாகத் தோன்றவில்லை. இன்றும் இந்த வஞ்சனையும் மோசமும் துரோகமும் நமது நாட்டு வணிகர் சூழலில் வளமாக நிலைபெற்றிருப்பதே இதற்குத் தக்க சான்று பகருகின்றது.

இந்த நிலை நமது நாட்டு வாணிகத்துறையில் நிலவுவதால் ஒருவர் பல ஆயிரக்கணக்கில் வைத்து வாணிகம் செய்தாலும் அவர் சொல்லும் விலையில், சொல்லில், ஏழைமக்களும் நம்பிக்கை வைப்பதில்லை, ஒரு பொருளின் விலை அவர் ஒரு ரூபா என்பாரானால், வாங்குபவர் அதைச் சிறிதும் நம்பாமல் முக்கால் ரூபா, அல்லவா? என்று கேட்பார். பின்பு சிறிது போது சொல்லாடல் நிகழும்; முடிவில் அவர் அந்தப் பொருளை முக்கால் ரூபாய்க்கோ பதினான்கணாவுக்கோ வாங்கிக்கொண்டு போவார்; பல்லாயிரம் ரூபாய் முதல்வைத்து வாணிகம் செய்யும் முதலாளியின் சொல் மதிப்பிழந்து பொய்பட்டே போகும். தமது சொல் பொய்படுவதையோ அதனால் தமது நாணயம் பொதுமக்கள் முன்பு கெட்டு நிற்பதையோ அவர் நினைப்பதும் இல்லை; உணருவதும் இல்லை, வேறு சிலர் தமது சொல்லுக்கு மதிப்போ நாணயமோ பொதுமக்கள் வையாமைகண்டு “ஒரே விலை" என்று வாணிகம் செய்யத் தலைப்பட்டனர்; ஆயினும் ஒரே விலைக்கேற்ற உயர்ந்த பொருளை அளவு குறையாமல் விற்பதை நெகிழவிட்டார்; ஒரே விலை என்பாரிடத்தும் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்கள் சமுதாயத்தில் நம்பிக்கையும் நாணயமும் உண்டு பண்ணாத வாணிகமோ தொழிலோ எதுவும் பலநாள் நீடிக்க இயலாதாகையால், நிறுவிய ஒரு சில ஆண்டுகளில் மிகப்ப்ல வணிகர் வீழ்ச்சியுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்.