பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

செம்மொழிப் புதையல்


படைகள் அடிக்கடி போரிடத் தலைப்பட்டமையின், வாணிகப் போக்கு வரவு ஆறலைக் கள்வரால் அலைப்புண்டது. இவ்விருவரும் வெற்றிலையும் பாக்கும் கொணர்ந்து வாணிகம் செய்பவர்கள். இவர்களுடைய செயலால் கோனாட்டில் வெற்றிலை பாக்குப் பஞ்சம் பெரிதாயிற்று. இவர்கள் பால் வெற்றிலை பாக்கு வாங்கி விற்கும் சிறு வணிகர் பெருந் துன்ப முற்றனர். சில காலங்களில் வெற்றிலை பாக்குக் கிடைப்பது அரிதாகவே, கோயில் காரியங்களும் முட்டுப்பட்டன. வேறே வணிகர் சென்று வெற்றிலை பாக்குக் கொணர்தற்கு அஞ்சினர்.

சில நாட்களுக்குப் பின் வேற்று நாட்டவர் சிலர் இவர்களால் சீர் குலைந்த வெற்றிலை வாணிகத்தை நடத்தலுற்றனர். கோனாட்டு வணிகருட் சிலர் அவர்கட்குத் துணை செய்தார்கள். வணிகர் பலராகவே அவரவரும் கட்டுப்பாடின்றித் தாந்தாம் வேண்டியவாறே விற்பனை புரிந்தனர். அதனால் கோயிலுக்குச் சேர வேண்டிய தரகும் குறையலுற்றது. அது கண்ட திருநலக்குன்றத்துக் கோயிலதிகாரிகள் புதுவராய்த் தோன்றிய வெற்றிலை வாணிகரை ஊக்கி, வேண்டும் வசதிகளைச் செய்து கொண்டார்கள். சுருங்கச் சொல்வோமாயின் வெற்றிலை பாக்கு வாணிகம் பழைய வடுக வாணிகர் கைவிட்டுப் புதியராய் வந்த வணிகர் கைக்கு மாறிப் போவதாயிற்று. ஆயினும், திரு நலக்குன்ற முடையார் கோயிலுக்குரிய வருவாய் செம்மை பெற வில்லை. இதனை எண்ணுவோரும் அருகினர். ஊரிரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போலக் காப்புக்குடி வெற்றிலை வணிகர் இரண்டு பட்டுக் கலகம் புரிய, அயல் நாட்டு வணிகர்க்கு ஆக்கம் பெருகிற்று. உண்ணாட்ட வருக்குச் சலுகை குறைந்தது. திருநலக் குன்றமுடையார் கோயிற்குரிய தரகு வருவாயும் நாட்டவர் வருந்தும் அளவுக்குக் குன்றிப் போயிற்று.

இதற்கிடையே, நாட்டிலுள்ள நல்லோருட் சிலர், கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் கண்டு நிகழ்வது முற்றும் நினைவுறக் கூறினர். இருவர் உள்ளமும் உண்மையை ஒர்ந்து கண்டன. சான்றோர் சிலர் கூடி இருவரையும் சந்து செய்வித்தனர். இருவரும் ஒற்றுமை கொண்டு வெற்றிலை வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தினர். ஆயினும், புதியராய் வந்து தோன்றிய வணிகர் முன்-