பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. உரிமை வாழ்வில் இலக்கியப் பணி

உரிமை வாழ்வென்பது பொது வுலகில் ‘சுதந்திர வாழ்வு’ என்று வழங்கும். இந்த வாழ்வு பெறுவதற்கு நம் நாட்டவர் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே முயலத் தொடங்கி, இந்த நூற்றாண்டின் இந்த ஆண்டு வரையில் பெரிய போராட்டத்தைச் செய்து வெற்றி பெற்றனர். இத்தகைய வெற்றி, உரிமைப் போருடற்றி வெற்றி பெற்ற நாடுகள் எவற்றிலும் இதுகாறும் உண்டானதே கிடையாது. ஏனை நாட்டவரால் எய்துதற்கரிய தாகிய இத்தகைய வெற்றிகொண்டு விளங்கும் நமக்கு வேறு எவருக்கும் இல்லாச் சிறப்பு உண்டாகிறது. மேலும், நம் நாட்டிலும், இறந்த ஆண்டுகளில் வாழ்ந்தவர்களிலும், எதிர் காலத்தில் தோன்றுகின்றவர்களிலும் இன்றைய நாம் நல்ல பேறுடையவர்கள் என்பதையும் நினைவு கொள்ளவேண்டும். உரிமைப் போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து கண்டு, அஃது எதிர்பாராத வகையில் வெற்றி தரவும் கண்டு இன்புறு கின்றோமாகையால், நாம் பெற்ற பேறு தலைசிறந்த பேறு என்பதில் தடை ஏது?

உரிமை வாழ்வு எய்தப் பெற்று இன்புறுகின்ற நமக்கு இவ்வாழ்வு உரியது தானா? புதிது பெற்றதொரு வாழ்வா? என்று சிறிது எண்ணமிட்டுப் பார்க்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு காண்பவர்க்கு, ‘தமிழ் நாட்டவர்க்கு இது புதிதன்று; முந்நூறு நானூறு ஆண்டுகட்கு முன்பு வரையில் தமிழ் நாட்டவர் உரிமை வாழ்விலே உறைந்தவர்’ என்பது நன்கு விளங்கும். ‘தமிழராகிய நமக்கு இறந்த உரிமை வாழ்வு மீள உயிர் பெற்று வந்திருக்கிறது’ என்றே எண்ண வேண்டும்.

பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவு ஆகிய ஐந்தும் உரிமை வாழ்வுக்குச் சிறந்த உறுப்புக்களாகும். அவரவரும் தத்தமக்குரிய நெறியில் நின்று நெஞ்சால் நினைப்பவற்றைச் சொல்லுதற்குத் தடை யில்லாமை