பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

201


உழைக்க, அவர் உழைப்பின் பயனை உறிஞ்சி யுண்டு உயிர்வாழ விரும்புவோர் ஒழிந்துபோவர். ‘யான் வாழ ஏனோர் எனக்கு அடிமையாக எனும் ஊன அறிவு’ ஓரிடத்தும் ஒரு சிறிதும் இராது.

ஒப்புரவு என்பது உரிமை வாழ்வுக்கு அழகு தருவதாகும். நாடுகளுக்கிடையே நிலவும் ஒப்புரவு, வறுமையும் அச்சமும் போக்கி, உரிமை வாழ்வில் ஊறிப் பெருகும் இன்பத்தை நுகரப் பண்ணும், நாட்டு மக்களிடையே விளங்கும் ஒப்புரவு, மக்கட் சமுதாயத்தில், வேற்றுமைசெய்யும் பிளவுகளைப் போக்கி, ஒற்றுமை நிறுவும் மனப்பண்பினை, வளர்க்கும். ஒப்புரவு என்பது ஒருவருக்கொருவர் வேண்டுவன வுதவி யொழுகும் ஒழுக்கமுறை; ‘ஒப்புரவொழுகு’ என்பது ஆத்திசூடி மக்களை ஒருவர்க்கொருவர் ஒன்றாகப் பிணித்து ஒருமை யுறுவிப்பதும், நாடுகளை ஒன்றோ டொன்று நீங்கா வகையில் ஒன்றுபட்டு வாழ வைப்பதும் ஒப்புரவென்னும் ஒள்ளிய அறம் ஒன்றேயாகும்.

மேற்கூறிய பேச்சுரிமை முதலிய ஐவகை யுறுப்புக்களையும் கொண்டு, பிற நாட்டவரது ஆட்சியின் கீழன்றித் தன்னாட்டவராளும், ஆட்சியில் வாழும் வாழ்வு உரிமை வாழ்வுக்கு உருவாகும். இன்று நாம் எய்தி இருக்கும் உரிமை வாழ்வு இத்தகைய தாகும். இந்த உரிமை வாழ்வு பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் தமிழகத்தில் இருந்ததென்பதைச் சங்க நூல்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தைத் தமிழரே ஆண்டனர்; அவரது தமிழ் மொழி அரசியல் மொழியாக விளங்கிற்று. தமிழர்கள் அத்தமிழ் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர். அவர் வாழ்வில் இவ்வுறுப்புக்கள் ஐந்தும் குறைவின்றியே இருந்தன. அதனால் அவர்கள் காலத்து இலக்கியங்கள் இவ்வைந்தும் வளம் பெறத் தக்க கருத்துக்களை எடுத்துக் காட்டின.

முதற்கண் பேச்சுரிமையைக் காணலாம். தமிழகத்தில் சங்க இலக்கியக் காலத்தில் நிலவியது முடியாட்சியே யன்றிக் குடியாட்சி யன்று. ஆயினும், முடியாட்சி, தான்தோன்றி யாட்சியாய் இல்லாமல், குடிகளின் மனக்கருத்தைத் தழுவிச் செல்லும் இயல்பு பெற்றிருந்தது. இதனால், அரசியலில் உரிமை அறிவுடையவர்க்கே இருப்பதாயிற்று. பாண்டி வேந்தன் ஒருவன், ‘ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது,