பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

203


என்று சொல்லி, நீர் கொண்டு நிலத்தை வளம் படுத்துவது உயிர்களைப் படைப்பதாகும் என்ற கருத்தை வேந்தன் மனத்தில் பதியவைத்தார். ‘ஏனை நாடுகளைப் போலப் பாண்டி நாடு பேராறுகளையுடைய தன்றே; இதனை நீர் வளமுடைய தாக்குவது எங்ஙனம்? என்று எண்ணாமை கருதி, நம் நாட்டில் உள்ளவை பெரிதும் புன்செய்க ளாகும்.

வித்திவா னோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட் குதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது, வல்லே
நிலன் நெளிமருங் கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளதோர் இவண் தள்ளா தோரே

என்றார். இதனால், புன்புலம் பயன்படாத, பள்ளப் பாங்கு நோக்கி நீர்நிலை யமைப்பின், அந்த நீர் நன்புலம் பெருகிப் பெரு நலம் விளைக்கும் என்று வற்புறுத்தினார். அன்று குடபுலவியனாரது பேச்சு நலம், இன்று பாண்டி நாடு நீர் நிலைகளால் மிகுந்து ஓரளவில் உணவுக் குறைவின்றி யமைதற்கு ஏது வாயிற்று.

சோழ நாட்டை உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கிள்ளி வளவன் என்பவன் ஒருவன். இவன் முடிவில் குளமுற்றத்து நடந்த போரில் வீழ்ந்து இறந்ததுபற்றிப் பிற்காலத்தார், இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று கூறுவர், இக் கிள்ளிவளவன் ஆட்சியில் “குடிதழீஇக் கோலோச்சும் இயல்பு” குறைவ தாயிற்று. பிற வேந்தருடன் போர் செய்து வென்றி பெறுவதால் உண்டாகும் விளக்கமே, வேந்தன் கருத்தை விழுங்கிக்கொண்டது. உழு படையினும் பொரு படையே வலி யுடையதெனச் சோழன் கருதிவிட்டான். இதனால் குடிகட்கு வருத்தம் மிகுந்தது. இதனை எடுத்துரைக்கும் உரிமையுடைய சான்றோர் கருத்தில் அச்சம் குடிகொண்டது. அக் காலத்தே வெள்ளைக்குடி யென்னும் ஊரினரான நாகனார் என்னும் சான்றோர் தோன்றி இக் கிள்ளிவளவனைக் கண்டார். “வேந்தே, பொருபடை தரும் வெற்றி குடிகளின் உழுபடையால்