பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

207


‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே, கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே’ என்றும், ‘பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே, நாராயணாவென்னா நாவென்ன நாவே’ என்றும் பாடுவது போதிய சான்றாகும்.

இனி, இதனை யடுத்து வந்த மணிமேகலை யாசிரியர் காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம், வைதிகம், பெளத்தம், ஆருகதம், நியாயம், சாங்கியம், வைசேடிகம், யோகம், மீமாஞ்சை முதலிய பல சமயங்கள் இருந்தன என்பது வெளிப்படை. இவ்வாறு சமயங்கள் பல இருந்தன வெனினும், அவை தம்முள் போரிட்டுக் கொண்டு ஒருவர் ஒருவர் வழிபாட்டுரிமைகளைப் பறித்துக் கொண்டதாக வரலாறு கிடையாது.

இனி, இதனை அடுத்துவந்த திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் காலத்தில் பல சமயங்களில் நிலவின. சமயப் பூசல் காணப்படவில்லை. இவற்றிடையேயும் ஒற்றுமை காண்பதற்கு முயற்சி செய்யப்பட்டுளது. திருமூலர்,

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனுமாமே

ஆன சமயம் அது.இது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி;
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே

என்பது காண்க.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சமண் சமய முன்னேற்றத்தால் சமயப் பூசல் உண்டாயிற்று. வழிபாட் டுரிமைக்குத் தடை பிறந்தது. நடு நாட்டில் பல்லவ வேந்தனும் பாண்டி வேந்தனும் பாண்டி நாட்டில் நெடுமாறனும் சமயப் பூசலில் தலையிடுகின்றனர். சமயப் போர் சமண் சமயம் ஒன்றோடுதான் நடந்திருக்கிறது. ஏனைச் சமயங்கள் எல்லாம் இருந்த வண்ணமே இருந்திருக்கின்றன. சமண் சமயத்தைத் தாக்கிப் பேசும் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர்களும் திருமங்கையாழ்வார்