பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
213
 

வகைகளில் சீர் பெற முடியாது. நாட்டில் செல்வர் சிலரும் வறியார் பலருமாக இருத்தற்குக் காரணங்காண வந்த திருவள்ளுவர் தவமுடையார் சிலரும் அஃது இல்லார் பலருமாதல் காரணம் எனக்கருதி, சிலர் பலராகிய காரணம் நோற்றார் சிலர்பலர் நோலாதவர்’ என்றார். எனினும் அதனை அவ்வாறே சொல்லி நெகிழவிட இக்காலநிலை. ஒருப்படாது. இக்காலம் உழைப்பில்லாமை வறுமைக்குக் காரணம்; உழைப்பில்லாதவர் ஒருவரும் இருத்தலாகாது. உழைப்பவர் உழைத்தற்கு நாடு வேலை தர வேண்டும். அவ்வேலையை நாட்டு மக்கள் நடத்தும் அரசியல் நேரிய முறையில் கண்டு அமைத்து உழைப்பாளிகட்டு உதவ வேண்டும் என்பது இன்று நிலவும் கொள்கையாகும்.

வறியவர் முன்னைத் தவம் இல்லாராயினும், இவ்வுலகில் வாழ்தற்கு உரிமையுடையவர். அதற்கு வேண்டும் பொருளை அவர் பெறாவாறு தவமில்லாமை இடைநின்று ஊழ்வினை வடிவாய் நின்று தடுக்குமாயின், முன்னைத் தவமுடைமையால் செல்வம் பெற்றவரும் பெறுதற்குரிய வலியும் ஆற்றலுமுடைய வரும், வறியவர் வேண்டுவன நல்கி வாழ்வித்தல் அறமெனக் கருதினர். திருவள்ளுவர் முதலிய சான்றோர் இக்கருத்துக்கு ஆதரவு தந்தனர். ‘சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்’ என்பது திருக்குறள். அதுவே, ‘வறியார்க் கொன்று ஈவதே ஈகை’ என்றும், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியம் இல்லை யுயிர்க்கு’ என்றும் அறவுரை வழங்கிற்று. செல்வமும் அதனைச் செய்தற்கு வேண்டும் வலியும் பெற்ற திருவாளர், இரப்போர்க் கீதல் சிறப்பென்றும், ஈயாமைக் கேதுவாகிய வறுமை இழிவென்றும் கருதி வஞ்சினங் கூறும் போது, ‘புரப்போர் புன்கண்கூர, இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே’ என்றும், மெல்லிய லரிவை நின் நல்லகம் புலம்ப, நிற்றுறந் தமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவா குகயான் செலவுறு தகவே’ (குறுந், 137) என்றும் கூறுவது காணலாம்.

இவ்வண்ணம் வறியாரது வறுமை தீர்த்தற்கண் பேரார்வங் கொண்டு தம் முயிரையே யளித்த வள்ளல்கள் வரலாறு சங்க இலக்கியங்களில் மலிந்து கிடக்கிறது. வேள்பாரி உயிரிழந்ததும்