பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

215


வடி அதன் வாயை கொடு அதைக் கையில்; செல்வேன்; செல்வரை வெல்வேன்; பொருள் மிகக் கொள்வேன்; இவர் வறுமையைக் கொல்வேன்’ என்பான், ‘எம் உண்ணாமருங்கு காட்டித் தன்னுரர்க் கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே என்பது கருதத்தக்கது.

இத்தகைய மனப்பான்மை வறுமை மிக்க வழித் தீநெறியில் மக்களைச் செலுத்தி உரிமை வாழ்வுக்கு ஊறுசெய்யும். ஆதலால் உரிமை வாழ்வு வறுமை யில்லாமைக்குரிய வழி பலவும் ஆக்கிக் கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்குவது இலக்கியங்கட்கு ஏற்ற பணியாகும்.

இனி, இறுதியாக ஒப்புரவாண்மையைக் காண்போம். உலகில் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் பெருஞ்செயல் இந்த ஒப்புரவேயாகும். ஆதலால்தான் திருவள்ளுவர், ஒப்புரவைக் காட்டிலும் சிறந்த செயல் விண்ணுலகினும் மண்ணுலகினும் பெறலரிது என்றார். ஒருவர்க்குத் தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருளெல்லாவற்றையும் தாமே படைத்துக் கொள்வது இயலாது. தம்மிடத்து இல்லாதவை பிறரிடத்திருக்கும்; பிறரிடத்தில்லாதன தம்பால் இருக்கலாம். இருவரும் தம்பால் உள்ளவற்றைப் பகுத்தளித்து இல்லாதவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இச்செயலை வளம்படுத்துவது. ஒப்புரவாகும். ஒரு தனிக் குடும்பத்துக்கு இவ்வொப்புரவு இன்றியமையாதவாறு போல ஒரு நாட்டுக்கும் இது வேண்டப்படுவதாகும். இவ்வொப்புரவு வாணிகத்தின் பெயரால் நிலவுவதாகும்.

பண்டைநாளில் குறிஞ்சி நிலத்துப் பொருள் மருத நிலத்தவர்க்கும், நெய்தல் நிலத்துப் பொருள் முல்லை நிலத்தவர்க்கும் மாறிமாறி இயங்கியது ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டேயாகும். இவ்வாறு மாறுவது அவ்வந்நிலத்து மக்கள் தத்தம் தேவைக்குரிய பொருளைப் பெறுதற்கு வாயிலாதலால் திணை மயக்கம் என்ற பெயரால் தொல்காப்பிய முதலிய நூல்கள் அமைதி கூறின. பிற்காலத்துப் புலவர் தாம் பாடிய நூல்களில் திணை மயக்கம் கூறுவதைக் கடமையாகக் கொண்டனர்.