பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

217



இதுகாறும் கூறியவாற்றால், குடி தழுவிய முடியாட்சி நிலவிய பண்டை நாளில், உரிமை வாழ்வுக் குறுப்பாகிய பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவாண்மையாகிய ஐந்தும் சிறப்புற்றிருந்தமை இனிது விளக்கமாகும். இன்று நாம் எய்தியிருக்கும் உரிமை வாழ்வு முடியாட்சியின்றிக் குடியாட்சியில் நிலவும் உரிமைவாழ்வாகும். இவ்வாட்சியில் நாட்டில் பிறந்த ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமையுண்டு. நாட்டில் உண்டாகும் நலந்தீங்குகட்கு நாட்டு மக்களே பொறுப்புடையராகின்றனர். அப்பொறுப் புணர்ச்சியை மக்கட்கு எழுப்பி நல் வாழ்வு வாழ்விக்கும் பண்பு இலக்கியங்களில் இடம் பெற வேண்டும்.

பேச்சுரிமை, அச்சமின்மை என்ற இரண்டையும் நம் தமிழிலக்கியங்கள் நன்கு வற்புறுத்துவதைச்சங்க இலக்கிய முதல் எல்லா இலக்கியங்களும் எடுத்துணர்த்துகின்றன. சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலிய இடைக் கால நூல்கள் அரசியற் பகுதிகளைக் கூறுமிடத்து விரியக் கூறியுள்ளன. ஒப்புரவாண்மையிலும் இடைக்கால நூல்கள் சிறிது கருத்துச் செலுத்தியிருக்கின்றன. கட்டியங்காரனோடு நட்புற்றான் போல ஒழுகலுற்ற விதைய நாட்டு வேந்தனான கோவிந்தன், நட்புக் கறிகுறியாக,

கட்டியங் காரனோடு காவலன் ஒருவனானான்
விட்டுநீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவகூறின்,
ஒட்டலன் இறைவன் சொன்னி நாதுமவல்ல என்னக்
கொட்டினான் தடங்கண் வள்வார்க் குளிறிடி முரசமன்றே

என்பது அதனைக் காட்டுகிறது. இவ்வொப்புரவுவகை மிகவும் பெருகிச் சாதி சமய சமுதாய வேறுபாடுகளையும் மக்களிடையே நிற வேற்றுமை முதலிய தீமைகளையும் போக்குதற்குத் துணை புரியுமாறு இலக்கியங்கள் பணிபுரிய வேண்டும்.

நாட்டில் வறுமையைப் போக்குதற்குரிய நெறியில் கருத்தைச் செலவு செய்த இலக்கியங்கள் இல்லையென்றே கூறலாம். செல்வ வாழ்வின் சிறப்புக்களையும் சீர் கேடுகளையும் எடுத்தோதிய இலக்கியங்கள் உண்டு. “எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே, இல்லாருமில்லை யுடையார்களு மில்லை மாதோ” என்றான் கம்பன். ஆனால், எல்லாரும் எல்லாச்-