பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
232
செம்மொழிப் புதையல்
 


“வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டாக லான.”

என்று தொல்காப்பியம் வழக்கினைக் காட்டுவது நேரிது எனக் காரணத்தோடு கட்டுரைக்கின்றது. ஆகையால் “என்று சிறப்பித்துச சொல்லப்படுவது” என்று, வழங்குதல் பொருத்தமே என உய்த்துணர வைக்கின்றார் பரிமேலழகர்.

ஒரு தலைவரின் கீழ் பணிபுரிபவன் தன்னை அவர் ஐயுறத் தக்க வகையில் நடந்து கொள்ளக்கூடாது; ஐயம் பிறந்து விடுமானால், பிறகு தெளிவிக்க ஒருகாலும் ஆகாது என்ற கருத்துப்பட,

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது”

என்று திருவள்ளுவர் கூறுகிறார் “கடுத்தபின் (ஐயம் தோன்றிய பின்) தேற்றுதல் யார்க்கும் அரிது” என்பது எவ்வாறு பொருந்தும் என மாணவன் கேட்கின்றான். இங்ஙனம், ஐயம் தெளிவு பெற வேண்டுங்கால் உரைகாரர்கள் இலக்கணம், வழக்கு, ஏது, எடுத்துக்காட்டு என்ற நான்காலும் விளக்கம் செய்வர். இங்கே நான்கனுள் இதனை எடுத்துக்காட்ட்ால் விளக்கம் செய்கின்றார் பரிமேலழகர். “கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழி யெல்லாம் நினைக்கப்படுதலின் தேற்றுதல் யார்க்கும் அரிது” என எடுத்துக்காட்டினால் உரைக்கின்றார்.

பரிமேலழகரது உரையிற். காணப்படும் பல்வேறு அழகுகளில் அரிய சொல்முடிவு காட்டி இலக்கண அமைதி கூறுவது ஒன்று. “கவ்வையாற் கவ்விது காமம்” என்ற குறட்பா வில் “கவ்விது” என்பது சவ்வையென்னும் சொல் அடியாக வந்தது; ஆனால், அங்ஙனம் வருதற்குத் தமிழ் இலக்கணத்தில் இடமில்லை; செய்யுளினும் வழக்கு வலியுடைத்து என்பது பற்றி, “செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்” என்று பரிமேலழகர் உரைப்பது இலக்கணப் புலவர்க்கு வியப்பும் இன்பமும் தருகிறது. காரணம் என்ன எனின், செவ்வை உடையதனைச் செவ்விது என்றல் தொல்காப்பியர் மரபு. “எவ்வயிற் பெயரும் வெளிப்படத்தோன்றி அவ்வியல் நிலையல் செவ்விது என்ப,”