பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
234
செம்மொழிப் புதையல்
 “நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.”

என்பது திருக்குறள். இதற்குத் தாம் ஓர் உரை வகுத்துக் கொண்டு, பிறர் கூறும் உரையை மறுத்து ஒதுக்குகின்றார். பரிமேலழகர் இதற்குப் பிறர் கூறும் உரை, “நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாள்” என்பது. இதன்கண், “நாளென ஒன்று” என்பதற்கு “நாள் என்பது ஒன்று” எனப் பொருள் பிறரால் உரைக்கப்படுகிறது. இவ்விடத்து “என” என்ற சொல் “என்பது” எனப் பொருள்படுகிறது. (1) ‘என’ என்பது ஒர் இடைச்சொல்லேயன்றி பெயர்ச்சொல் அன்று என்பது பரிமேலழகர் கொள்கை. அது (என) “என்பது” எனப் பொருள்படக் கூடாது. (2) ஒன்று போல் காட்டி என்பதற்கு “ஒரு பொருள் போலத் தோன்றி” என்று பொருள் உரைக்கப் பட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதில் பொருள் சிறப்பு இல்லை என்பது பரிமேலழகர் கொள்கை. “வாளது” என்றவிடத்து “அது” என்பது குற்றியலுகரம் அன்று. ஆகவே, பரிமேலழகர் கருத்துப்படி “அது உணர்வார்” என புனராது முறைப்பட வர வேண்டுமாயின் “அஃதுணர் வார்ப் பெறின்” என வருதல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் இதற்கு பிறர் கூறுவது பொருந்தாது என்ற கருத்துப்பட “என” என்பது பெயரன்றி. இடைச்சொல் ஆகலானும், “ஒன்று போற்காட்டி” என்பதற்கு ஒரு பொருட் சிறப்பின்மையாலும், “அது” என்பது குற்றியலுகரம் அன்மையாலும், அஃது உரையன்மை அறிக என்று பரிமேலழகர் மறுக்கின்றார்.

இனி பரிமேலழகர் கருத்தை ஆராய்வோம். “என” என்னும் சொல் இடைச்சொல்லே யன்றி பெயர்ச் சொல் அன்று எனப் பரிமேலழகர் கருதுவது தொல்காப்பியத்திற்கு முரண் ஆனது. ‘என’ என்னும் இடைச்சொல் பெயர்ப் பொருளிலும் வரும் என்ற கருத்துப்பட “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரோடு அவ்வாறு கிளவியும் கண்ணிய நிலத்தே, என என் கிளவி” (தொல். இடை - 10) என்று தொல்காப்பியம் கூறுகிறது. அடுத்து “ஒன்றுபோல் காட்டி” என்பதற்கு ஒரு பொருள் போலக் காட்டி என்றதில் பொருள் சிறப்பில்லை என்கிறார். ஆனால், அவர் இல்லை என்பதற்குத் தக்க காரணம் கூறாமையால் அவர் உரை செல்லாதாகிறது.