பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

செம்மொழிப் புதையல்


என்பது காண்க, இதனால் சேரலாதன் வெண்ணியிலேயே வடக்கிருந்தா னென்பது 'அழிகள மருங்கின் வாள்வடக்கிருந்தென" என்பது கொண்டு தெளியப் படுகிறது. படவே, வெண்ணிக் குயத்தியார் சேரலாதன் வடக்கிருப்பது கண்டு பாடியது நன்கு வலியுறுகிறது.

இனி, இறுதியாகக் காணப்படுபவர் கருங்குழ லாதனார் என்பவராவர். இவர் கரிகாலன் பாண்டியனையும் சேரலாதனையும் குறு நிலத் தலைவரான வேளிர் பலரையும் வென்று சிறந்து விளங்குவதைப் பாராட்டிப் பாடியுள்ளார். ஆதனால் ஆதன் என்பன தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவாகப் பயில விளங்கும் பெயராயினும், சேர வேந்தர் பலர் சிறப்பாக அவற்றை மேற்கொண்டிருத்தலால், இவர் சேரர் குடியில் தொடர்பு உடையரெனக் கருதுதற்கும் இடமுண்டு.

கரிகாலன் வாகைப் பறந்தலையில் பாண்டியனையும் வேளிரையும் வென்று தென் பாண்டி நாட்டுள் மேற்றிசை நோக்கிச் செல்லலுற்றானாக, அங்கே அவனை எதிர்த்த பகைவர் ஊர்களெல்லாம் தீக் கிரை யாயின. சென்ற விடமெல்லாம் அழு விளிக்கம்பலை' (அழுகுரல்) மிகுவ தாயிற்று. நாட்டில் நற் பொருள் விளைதற்கும் இருத்தற்கும் இடமில்லையாமாறு அழிவுவினை நடைபெற்றது. இவற்றைக்கண்ட ஆதனார் கரிகாலனை யடைந்து அழிவு நிகழாவிடத்து இருக்கும் நாட்டு நிலையையும், நிகழ்வதனால் உண்டாகிய கேட்டையும் அவற்கு உரைத்து, அவன் உள்ளத்தில் அருள் நிலவச் செய்ய வேண்டுமெனக் கருதினார். சோழன் கரிகாலன் புலவர்களை வரவேற்று, அவர் புலமை நலத்தை யோர்ந்து வேண்டும் பரிசினல்கும் பான்மை யுடையவன். அதனால் அவர் அவனை எளிதிற் காணமுடிந்தது. சோழனைக் கண்டு, வளவ, களிறு ஊர்ந்து அவற்றைச் செலுத்துதற்கு ஏற்ப இயன்ற முழந் தாளும், கழலணிந்து உரிஞப்பட்ட அழகிய திருவடியும், அம்பு தொடுக்கும் திறனும், இரவலர்க்கு அள்ளி வழங்கும் வளவிய கையும், கண்ணாற் காண்பார்க்கு விளங்கத் தோன்றும் வில்லும், திருமகள் தனக்கேயுரிமை பூண்டு விளங்கும் மார்பும், பெருங்களிற்றையும் பொருது பெயர்க்கும் பெருவன்மையும் கொண்டு விளங்குகின்றாய். நின் உள்ளத்தே சினத்தை யெழுப்பிப் போரில்