பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

23


மண்ணாளும் மன்னரைப் போன்ற மாண்புடையவராகவும், தளர்வறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்தனர். அவர் வாழ்வு எளிமையில் வளமை கண்ட வாழ்வு. வாழ்வில் எளிமை; சிந்தனையில், சொல்லில் செயலில், உயர்வு; இதுவே பிள்ளையவர்களின் பெருமை. நான் பழகிய காலத்தில் பிள்ளையவர்கள் குடும்பம் மிகச் சிறியதொன்றே. அந்நாளில் தமிழாசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவு. வேறு வருவாய்க்கும் வழியில்லை. எனவே, பிள்ளையின் வருவாய் அச்சிறிய குடும்பத்தையும் செம்மையாக ஒம்புதற்குப் போதியதாக இல்லை. எனினும் அவர் குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு நேர்மை தவறாமல் நிமிர்ந்து வாழும் நெறியாளராக விளங்கினார். எளிய உடையையும் எடுப்பாக உடுக்கும் கலை அவருக்குக் கைவந்திருந்தது. கவலைக் குறியின்றிக் களை தவழும் முகத்தோடு கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சீரிய பண்பு அன்றோ அவர் பால் சிறப்பாக அமைந்திருந்தது. எந்நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துகளை மாற்றிக் கொள்ளவோ அவர் இணங்கியதில்லை. அதனால் இடுக்கண் நேர்ந்த பொழுது நடுக்கமுறாமல் அதனை நகைமுகத்தோடு ஏற்று நலியச் செய்யும் மிடுக்குடைமை அவரது சிறப்பியல்பாகும். வாழ்விலும் பிறரோடு பழகும் முறையிலும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினா ரெனினும் ஏக்கழுத்தும் பீடு நடையும் கொண்ட ஏற்றம்மிக்க தோற்றம். அவருக்குப் பிறவிப் பேறாக வாய்த்திருந்தது.

அடக்கமும் அஞ்சாமையும்

பிள்ளையவர்கள் கடல் போன்ற கல்வியினராயினும் அவரிடம் தருக்கோ, தற்பெருமையோ தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத்திலும் நன்னடக்கையிலும் அவர் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க மாண்புடையவர். அவரைப்போல ஆரவாரத்தில் ஆர்வம் காட்டாமல், பாராட்டையும் புகழையும் எதிர்பாராமல், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் கொள்கையைக் கடைப் பிடித்து அமைதியாகத் தமிழ்ப்பணியில் ஆழ்ந்திருந்தவரைக் காண்டல் அரிது. நீர் தளும்பாத நிறைகுடம் போல ஆரவாரமின்றி அமைந்தொழுகிய பிள்ளையவர்கள் அறியாத ஒன்றும் உண்டு.