பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

255


"வன்மதிமுக்குடையான்மலரடிதொழ, நெல்லணி லக்கம் நெஞ்சினில் வருமே" என்பது நெல்லிலக்கவாய்பாடு. "அருகனை அமலனை அசலனையடிதொழ, சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” என்பது சிறுகுழி வாய்பாடு. இவ்வாறு கல்வி பயின்று வரும் சிறுவர்கட்குத் தமிழ் நூல்களைக் கற்பித்தற்குத் தோற்றுவாயாக நிகண்டுகள் செய்யத் தொடங்கினர். இவர் காலத்துக்கு முன்பிருந்தவை நூற்பா வடிவில் பெருநூல்களாக இருந்தன. அவை, இசையொடு விரவி, புதுப்பாவினத்திற் செய்யப்படின் கற்பார்க்கு ஊக்கம் மிகும் என்று கருதினர். அதனால் அவர்கள் சூடாமணி நிகண்டு முதலிய நூல்களைச் செய்தனர். இதன்கண்ணும் தம் சமயக் கருத்துக்களை வேண்டுமிடங்களிற் காட்டியிருக்கின்றனர். காப்புச் செய்யுள், "முடிவில் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி"ச் செய்தது உலகறிந்தது. பகவன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுமிடத்து, "பகவனே ஈசன்மாயோன் பங்கயன் சினனே புத்தன்” எனத் தொகுத்துரைத்தனர். பன்னிரண்டாவது தொகுதிக் கண், "சொல்வகை எழுத்தெண்ணெல்லாம் தொல்லைநாள் எல்லையாக, நல்வகையாக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை, வெல்வினை தொடங்கச்செய்து வீடருள்வோன் தாள் போற்றி” செய்கின்றார். பின்னர், நானிலங்கள், நால்வகையங்கங்களை விரித்துக் கூறலுறுவார், இடையே, சமண் சமயக் கருத்தாகிய நாற்கதி வகையினை நுழைத்து, "நாற்கதி உம்பர் மக்கள் சொல்லிய விலங்கினோடு நரகர்" எனக் கூறினர். இவ்வாறே சைவர்கள் கூறும், சிவனுக்குரிய எண்வகைக் குணங்களைக் கூறுமிடத்து, அருகனுக்குரிய எண்வகைக் குணமும், இறைவனுக்கு ஆகாவெனத் தம் சமய நூல்கள் விலக்கிய எண்வகைக் குற்றங்களையும் கூறியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நிலவிய தொல்காப்பியம் மிக விரிந்து பரந்த நூலாய்க் கிடந்தமையின், அதனைச் சிறுவர்கள் எளிதில் கற்றற்குரிய நிலையில் சின்னூலும் நன்னூலும் இயற்றியிருக்கின்றன. சின்னூல் செய்த குணவீரபண்டிதர் என்னும் பெரியார் வடநூன் மரபுகளை ஒரு சிறிதே தழுவி, தம் சமயப் பொருட்குரிய வணக்கங் கூறிச் செல்லுகின்றார். நன்னூல் செய்த பவணந்தி முனிவர் சுருங்கிய சிலவாய சொற்களால் மிக அழகியதாக இதனைச் செய்துள்ளார். இதன்கண், இவர்தம் சமயக் கருத்தைக் காப்புச் செய்யுளிற் காட்டியதோடு நில்லாது, எழுத்தின் இலக்கணத்திலும் புகுத்தியிருக்கின்றார். ஆசிரியர்