பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
257
 

யினும், இவை யாவும் சமண் சமயக் கருத்துக்களையே முற்றும் கூறிச் செல்கின்றன. இவற்றுள் சூளாமணி என்பது தலையாயது. இதனை இயற்றிய பெரியார் தோலாமொழித்தேவர். இவர் பெயரும், சீவக சிந்தாமணி செய்த திருத்தக்கதேவர் பெயரும் இயற்பெயரல்ல என்று கருதுகிறேன். இவர்களைப்போலத் தமிழ்த் தொண்டு புரிந்த சமண முனிவர் பெயரெல்லாம் வட மொழிப் பெயராகவே இருக்கின்றன. குணவீரபண்டிதர், அமுதசாகரர், மண்டலபுருடர், வாமதேவர் என்பன பலவும் வடமொழிப் பெயர்களே. ஆகவே, இவர்கள் தமிழ் நூல் பயின்று, தமிழ் வேட்கை மிகுந்து, தமிழர்போலத் தாமும் தமிழராகவே இயைந்து நிற்கும் தமிழ் நல மிகுதியால், தம்மைத் தமிழ்ப் பெயரால் திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர். என்பவராகக் கூறினாராதல் வேண்டும். இவர்கட்குப் பலவாண்டுகட்குப் பிற்போந்த கான்ஸ்டான்டினஸ் பெஸ்ச்சி என்பாரும், தமிழ்த் தொண்டுபுரியும் சால்பு எய்திய வழித் தம்மை வீரமாமுனிவர் எனக் கூறிக்கொண்டது, என் கருத்திற்கு ஆதரவு தருகின்றது. இவ் வீரமாமுனிவரும் தேம்பாவணி என்னும் காவியமும், தொன்னூல் என்னும் இலக்கணமும் பிறவும் செய்து தமிழ்த் தொண்டு புரிந்திருக்கின்றார். சீவகசிந்தாமணி யென்பது பெருங்காப்பிய மைந்தனுள் தலையாயது. ஏனை நான்கனுள் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் என்னும் சைவரும், மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் என்னும் தமிழரும் எழுதினர். ஏனை இரண்டும் இறந்துவிட்டன. இவற்றுள் மணிமேகலை புத்த சமயக் கருத்துக்களைத் தன்பாற் கொண்டது. சிலப்பதிகாரத்தும் சமண் சமயக் கருத்துக்கள் காணப்படும். ஆயினும் சமயத் தொண்டிற்கும் தமிழ்த் தொண்டிற்கும் ஒத்த இலக்கியமாய் விளங்குவது சீவகசிந்தாமணியே யாகும்.

சூளாமணி, சமண் சமயத்தவ்ரும் ஏனைச் சமயத்தவரும் ஒப்பப்போற்றும் தகுதியுடையதாய் இருக்கிறது. இதனை எழுதிய ஆசிரியர், தமிழ்நாட்டில் நிலவிய புறச்சமயப் பெர்ருள்களையும் சமயப் பொருளையும் கற்று, தம் சமய நூல்க்ளிலும், புறச்சமய நூல்களிலும் ஒத்தவாய் உள்ள கதைப் பகுதிகளைக் கண்டு, அவற்றைத் தமிழ் மக்கட்கு உணர்த்தி அவர் தம் ஆதரவு பெறுவதை நாடிய நல்லறிஞராவர். இதனால், இவர் எழுதிய இந்நூல் இன்றுகாறும் நன்கு போற்றப் பெற்று வருகிறது. சீவகசிந்தாமணியும் இப்பெற்றித்தாய்ச் சைவர் ஒருவரால் உரைகாணவும் பெற்றிருக்கிறது. .