பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

செம்மொழிப் புதையல்


நாடுகட்குச் சென்று வருவவதை மேற்கொண்டிருந்தனர். இவர் தம் அரசியல், பதினெட்டாம் நூற்றாண்டில் தளர்ச்சியடைந்து வீழ்வுற்றது நாம் அறிவோமன்றோ? அதுவரையில், வட மேற்குக் கணவாய்களின் வழியாகப் பொகாரா, சாமல்கண்டு, பால்கு, குராசான், கிவாரிசும், பாரசீகம் என்ற நாடுகளிலிருந்து மக்கட் கூட்டம் நம் நாட்டிற்கு வந்து கொண்டிருந்தது. அந்நாளில் ஆப்கானித்தானமும் டில்லி வேந்தரின் ஆட்சியில்தான் அடங்கியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜஹாங்கீர் என்னும் மன்னரது ஆட்சிக்காலத்தில், நம் இந்திய நாட்டிலிருந்து போலன் கணவாய் வழியாக ஆண்டுதோறும் 14000 ஒட்டகச் சுமையளவினவாய பொருள், கந்தகார், பாரசீகம் என்ற நாடுகட்குச் சென்றன. “மேலைக்கடற் கரையில் இருந்த பட்டினங்கள் (Sea ports) வெளிநாட்டுக் கடற் போக்கு வரவுக்கு வாயில் திறந்திருந்தன. கீழைக்கடற்கரைப் பட்டினங்களுள், மசூலிப்பட்டினம் ஆயிரத்து அறுநூற்றேழாம் ஆண்டுவரைக் கோலகொண்டாவை யாண்ட சுல்தான்களுக்கு உரியதாயிருந்தது. அதற்குப் பின்பே அது முகலாய வேந்தர்கட்கு உரியதாயிற்று. அப்பட்டினத்திலிருந்து, இலங்கை, சுமித்திரை, சாவகம், சீயம், சீனம் என்ற நாடுகட்கு வாணிபம் பேணி, வங்கங்கள் பல சென்ற வண்ணமிருந்தன என முகலாயராட்சி (Moghul administration) என்ற நூல் கூறுகின்றது.

.

வட நாட்டில் முகலாய முடிமன்னர்களின் ஆட்சி நிலவிய காலம் இருநூறுயாண்டுகளேயாகும்; ஆயினும், அக்காலத்தில் நம் நாட்டிற்கு உண்டாகிய நலங்கள் பலவாகும். பல வேறு வகை மொழி வழங்கும் நாட்டிற்கு அரசியல் மொழி யொன்று பொதுவாக வேண்டப்படுவதாயிற்று. அஃது அந்நாட்டு மொழிகளுள் ஒன்றாயின், பிறமொழி பேசுவோர் கூட்டத்து அமைதி உண்டாகாது எனவுணர்ந்து, இம்மன்னர்கள் தமது பாரசீக மொழியினையே அரசியல் மொழியாக வகுத்தனர். பின்னர் அது பலர்க்கும் தாய்மொழியாம் நிலைமையினையும் அடைவதாயிற்று. அதனால் ஆட்சிமுறையும் நாணயச் செலாவணியும் ஒரு முறையாய் நடைபெறலாயின. இன்றும், கச்சேரி, ஜில்லா, தாலுகா, பிர்க்கா, தாசில்தார், உசூர் என வழங்கும் சொற்கள் பலவும் அவர்தம் ஆட்சிநெறியின் ஒருமை முறையினை விளக்கும் அடையாளங்களாகும். நாட்டு மக்களிடை ரெக்டா எனப்படும் இந்துத்தானிமொழி வழங்கி வந்தது.