பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

271


இவர்கள் காலத்தில், விந்தவரைக்கு வடக்கிலுள்ளநாடு, பல சிற்றரசர்க் குரிமையுற்று, பல சிறு நாடுகளாகப் பிரிந்து, எப்பொழுதும் போரும் பூசலும் நிகழும் அமர்க்களமாயிருந்தது, அவர்களையடக்கி, அரசிற்குரிய அமைதி பெறுவித்ததோடு. அவர் தம் நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவுவித்தனர். தம் சமயத்தை நாட்டில் பரப்புதல் வேண்டும் என்ற கருத்து இவர்தம் மனத்தில் மிக்கிருப்பினும், அரசு கட்டில் ஏறி மக்கட்கு நலம் செய்வதும் சிறப்புடைப்பணியாகலின், இவர்கள் அத்துறையினும் சீரிய அறமே புரிந்து போந்தனர். அந்நாட்டில், பெரும்பாலும் ஒரு நெறிப்பட்ட ஆட்சிமுறையும், பொது மொழியும் நிலவச்செய்த இப்பெருமக்களின் திருப்பணியால், இடந்தோறும் மொழி, உடை முதலியவற்றில் வேறுபட்டுக் கிடந்த இந்திய மக்கள், தவ சமூகவொழுக்கம், உடை முதலிய அவற்றுள்ளும் ஒருமை நெறியை மேற்கொண்டனர். நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவவே, மக்கள் தம் தாய்மொழியிலும் மிக்க பயிற்சிகொண்டு சிறந்த இலக்கியங்கள் செய்தனர். இன்பமும், அமைதியும் உரிமையும் நிலவும் நாட்டில்தான் உயர்ந்த இலக்கியங்களும், அரிய கருத்துக்களும் பிறக்கும் என அறிஞர் கூறுவர். இவர்கள் காலத்தில் இவை மிகப் பெருகி நாட்டிற்குச் சிறப்பு நல்கின. தான் அடைந்த முதுமையினைத் தான்பெற்ற மகனுக்கு நல்கி, அவனது கட்டிளமையைத் தான் பெற்று மகிழ்ந்த அரசர்கள் இந்துக்களில் இருந்தனர். தம் வரலாற்றினைத் தாமே வரைந்த அரசர் பாபர் பெருமான். நாட்டில் வழங்கிய நாணயங்கள், சகடக்கால் போல் மக்கள் கையகத்து நில்லாது பெயரும் நீர்மையவாயினும், அவர்களால் காதலித்துப் போற்றப்படும் இயல்பறிந்து அவற்றின் வழியாக அறத்தைப் பரப்பி நிறுவிய அறிவுநலம் இவர்கள்பால் இயல்பாகவே அமைந்து கிடந்தது. ‘நல்லது செய்வது ஆண்டவனுக்கு அளவிறந்த உவப்பைத் தருவது; நடுநிலை திறம்பாது நன்னெறியிற் சென்றோர் கெடுவதிலர்; கெட்டார் என யாம் கேட்டதுமில்லை” எனப் பொறித்த நாணயங்கள் இவர்கள் காலத்தில் அறநெறி வழங்கி மக்களை அறிவுடையராக்கின. “அயின் அக்பரி” என்ற அரசியல் நூல் அக்பர் என்னும் அரசர் பெருந்தகை காலத்தில் பிறந்ததென்பது சிறுமகாரும் அறிந்த செய்தி யாகும்.

போர்த்துறையில் பலதிறமானபயிற்சிகளும், நாகரிகத்தில் சிறப்பும், கல்வியில் பெருமாண்பும் நல்கிய இவர்தம் காலத்தில்,