பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
செம்மொழிப் புதையல்
 

கருதிக் கைவிடும் நூல்களைக் கைக்கொண்டு பொறுமையாகப் பலகால் பயின்று பயன் கண்டு மகிழும் பண்புடையவர். அவர் புலமை பழமையினின்றும் மலர்ந்து புத்தொளிகானும் புதுமையது. பிறர் சிலரைப் போலப் பழைய நூல்களையும் உரைகளையும் பழித்து ஒதுக்குவதும், புதுமை மோகத்தால் மரபோடு மாறுபட்ட பொருந்தாத புதுக்கருத்துகளைப் புகுத்திப் போலிப்புகழ் பெற முயல்வதும் ஆகிய புன்மைக்குணம் அவரிடம் இல்லை. அவ்வாறே புதுமைக்கு இடங்கொடாமல் பழமையையே பற்றி நிற்கும் பிடிவாத குணமும் உடையவர் அல்லர். அவர் தம்மிடம் பாடங்கேட்கும் மாணாக்கர்களைப் பாடம் தொடங்குமுன் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்ற பண்டை உரையாசிரியர்கட்கு வணக்கம் கூறும் பாடல்களை ஒதுமாறு வற்புறுத்தி வந்தது அவர்களிடத்தும் அவர்களுடைய உரைகளிடத்தும் அவருக்கிருந்த பற்றையும் மதிப்பையும் விளக்குவதாகும். ஆனால், அவர் வேறு சிலர்போல உழுத சால் வழியே உழுது செல்லும் இழுதை நெஞ்சினர் அல்லர். அவர் பண்டையாசிரியன்மாரின் கருத்துகளோடும் உரைகளோடும் மாறுபட்டுப் புதுக் கருத்துகளையும் உரைகளையும் கண்டு கூறத் தயங்கியதில்லை. ஆனால், அத்தகைய இடங்களில் அவர்கள் அவ்வாறு கருதியதற்கும் உரை கூறியதற்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து கண்டு அவற்றின் பொருத்தத்தைத் தெளியத் தெரிந்து கொண்டு, பின்னர் அவர்களைக் குறை கூறாமலும், அவர்களுடைய கருத்துகளையும் உரைகளையும் இகழ்ந்து விலக்காமலும், அவற்றிற்கு மாறாகத் தாம் கொள்ளும் புதுக்கருத்துகளையும் காணும் உரைகளையும்கூறி அவற்றின் சிறப்பைக் காரணம் காட்டி விளக்குவது வியப்புக்குரிய அவரது சிறப்பியல்பாகும். இங்ஙனம் பழமைக்கு அமைதி கண்டு புதுமைக்கு வழிகோலும் பிள்ளையவர்களின் புலமைத் திறம் பிறரிடம் காண்டற்கரிய தொன்று.

பிள்ளையவர்கள் பெரும்புலவர் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், மகாவித்துவான் மு. இராகவையங்கார், திரு.வி.க., சச்சிதானந்தம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, கா. நமசிவாய முதலியார் முதலிய பெருமக்கள் நான் பிள்ளையவர்கள்