பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
27
 

மாணவன் என்பதால் என்னிடம் அன்பு கொண்டு மதிப்பும் மரியாதையும் காட்டிப் பழகியதொன்றே அவர்கள் பிள்ளையவர்களிடம் கொண்டிருந்த நன்மதிப்புக்கு உற்ற சான்றாகும். பிள்ளையவர்களின் ஆக்கம் கண்டு ஆற்றாது அழுக்காறு கொண்டோர் சிலர் இருந்தனர்; எனினும் பெரும்புலவர் பலரும் அவர் புலமை வளம் கொண்டு அவரைப் போற்றவே செய்தனர். பிள்ளையவர்கட்கும் அவர்களிடம் பெருமதிப்பு உண்டு. ஆனால், யாரிடமும் தம்மைத் தாழ்ந்தவராகக் கொண்டு பணிந்தொழுகும் தாழ்வு மனப்பான்மை பிள்ளையிடம் காணப்படாத ஒன்று. எவரிடமும் சரிநிகர் சமானமாகவே பழகுவது அவர் தனிச் சிறப்பாகும்.

நல்லாசிரியர்

பலதிறப்பட்ட பொதுநலப் பணிகளிலும் ஆசிரியர் பணி அருமை வாய்ந்தது. அதற்குரிய பண்புகள் படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல; பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. ‘குலன், அருள், தெய்வங் கொள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை, நிலம், மலை, நிறைகோல், மலர்நிகர் மாட்சியும், அமைபவன் நூல் உரை ஆசிரியன்’ என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னூல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள் இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர். ஆசிரியராவார் மாணவர் உள்ளத்தில் தம்மாட்டுத் தனிமதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல் வேண்டும். அவர்க்கு இன்றியமையாத அடிப்படைப் பண்பு அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், தெளிவான திருந்திய உச்சரிப்பு, அரிய கருத்துகளையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவை அனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப் பண்புகள் மாணவர்களை அவரிடம் "அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு” பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாணவர்களை அவரிடம் பக்தியும்