பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

செம்மொழிப் புதையல்


சட்டங்களையும், அவற்றின் விளக்கங்களையும், நடுவர்களின் முடிவுரைகளையும் பெற்றுப் படித்தார்; சட்ட நூற் புலவர்களும், நீதிமன்ற நடுவர்களும் சட்டவிதிகட்கு விளக்கம் காணும் முறையையும் நடுவர்கள் முடிவு கூறும் திறனையும் தெளிவு பெற அறிந்தார். வெவ்வேறு சமயச் செய்திகளை அவ்வச்சமய அறிஞர்களை அடுத்துக்கேட்டு அறிந்து கொண்டார். வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களின் நூல்களையும், கல்வெட்டுக்களையும், அவை பற்றிய விளக்க நூல்களையும் பெற்றுப் படித்து ஆராய்ந்து, தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும், வரலாற்றுச் செய்திகளை வகைப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பல்லாண்டுகள் முயன்று பழந்தமிழ் நூல்கட்கு நயம்பட உரைகாணும் பண்பும் பாங்கும் உரமும் திறமும் பெற்றார்.

பிள்ளைவர்கள் முதன் முதலாக உரையெழுதி வெளியிட்டது திருஞானசம்பந்தர் அருளிய திருவோத்துர்த் தேவாரத் திருப்பதிகமாகும். அதனோடு ஞானாமிர்தம் என்னும் சமய நூலுக்குத் தெளிவுரை எழுதி வந்தார். பின்னர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய 'ஐங்குறுநூறு’ என்னும் நூலுக்கு உரையெழுதத் தொடங்கினார். அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து அறிந்து கொண்டு அதற்கு விரிவான விளக்கவுரை வரைந்து முடித்து, அதன் முதற்பகுதியை. அச்சிடுவித்து வெளியிட்டார். பின்னர் மற்றப் பகுதிகளும் வெளியிடப்பட்டன. சொற்பொருள், சொல்நயம், சொல் பொருள் நயங்கள், இலக்கண விளக்கம், அகப்பொருள் அமைதி என்னும் அடைவு முறையில் அமைந்த அவ்வுரை புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. அதனை, அடுத்துப் பதிற்றுப்பத்து நூலுக்கு உரையெழுத முற்பட்டார். சேரர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள இலக்கியப் பகுதிகளையும் தென்னாட்டையும், சிறப்பாகத் தமிழகத்தையும், தமிழரசர்களையும், அவர்களுள் சேர மரபினரையும் பற்றி வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள கட்டுரைகளையும், நூல்களையும், கல்வெட்டுக்களையும் விரிவாக ஆராய்ந்து விளக்கவுரை எழுதி வெளியிட்டார். பதிற்றுப்பத்திற்குப் பின்னர், புறநானூற்றுக்குச் சிறப்புரை வரைவதில் ஈடுபட்டார். பல ஏடுகளைக் கொண்டு ஆய்ந்து குறைப்பாடல்களாக இருந்தவற்றை இயன்ற வரை