பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

செம்மொழிப் புதையல்


விரிவான விளக்கக் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட உரைகள் யாவும் பெரிதும் அக்குறிப்புகளின் விரிவே ஆகும். அகநானூறு, குறுந்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றுக்கும் அவர் அரிய குறிப்புகள் வரைந்து வைத்திருந்தார். அவை இன்னும் உரைவடிவு பெற்றில. அவையும் உரைவடிவில் வெளிவருமாயின் தமிழ் மொழியின் வளம் செழிக்க உதவும். பிள்ளையவர்களின் புலமைப்பணி அவர் ஒய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தது. ஒய்ந்திராமல் பொள்ளாச்சி வள்ளல் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் உதவியால் திருவருட்பா நூலுக்கு விரிவுரை எழுதினார். தமிழ் அறிஞர்களின் துணையும், தமிழ்ச் செல்வர்களின் ஆதரவும் கிடைக்கப் பெற்றிருந்தால் அவர் தமிழ்மொழியின் செழிப்புக்கு இன்னும் பல சிறப்புத் தொண்டுகள் செய்திருக்கக் கூடும். அதற்குரிய ஆர்வமும் அளவிறந்த ஆற்றலும் அவருக்கு உண்டு.

பேச்சாளர்

பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், பேச்சு வன்மை ஆகிய மூன்றும் ஒருவரிடம் ஒருங்கு அமைவது அரிது. இவற்றுள் ஒன்று இருப்பவரிடம் ஏனை இரண்டும் இருப்பதில்லை. ஆனால், பிள்ளையவர்களிடம் இம் முத்திறனும் ஒருசேர முழுமையாக அமைந்திருந்தன. பேச்சு வன்மை ஒரு கலை; பெறுதற்கரிய கலை. அது பிள்ளையவர்களுக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர் விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு தம் பேச்சுத் திறனைப் பேணி வளர்த்துக் கொண்டவர். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற் பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர் விவேகானந்தரின் உரைகளைப் பலமுறை படிக்க வேண்டும் என்று அவர் தம்மாணவர்கட்குக் கூறுவதுண்டு. கவர்ச்சியான தோற்றம், அவைக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழுத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் ஆகிய பேச்சாளர்க்கு இன்றியமையாத அமைதிகள் அனைத்தும் பிள்ளையவர்களிடம் இயல்பாகவே இனிது அமைந்தன. பேச்சுக்குரிய பொருள் இலக்கியம். இலக்கணம், சமயம்