பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64
செம்மொழிப் புதையல்
 


அவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்து மேற்கொள்ளும் தன்மையாகும். அங்ஙனம் மேற் கொள்ளுதற்குரிய துணையாகும் மனத்திட்பமே துணிவு என்பது. துணிந்தவழி, இடையில் வந்து தகையும் இடையூறுகளால் உள்ளமுடையாமல், செய் வினையைக் கடைபோக உழைத்து வெற்றிகாணும் திறம் முயற்சியாகும். அதன்கண் அறியாதனவற்றை அறிந்தாற்றும் விரகு வேண்டியிருத்தலின், அறிவறியும் ஆர்வம் வேண்டுவதா யிற்று. அவ்வார்வத்தால், முதற்கண் தாமே தேர்தலும் பிறர் காட்டக் காண்டலும் ஆகிய இரு நெறிகளால் தம் குற்றத்தைக் கண்டு அதனைக் கடிவதும், செய்த குற்றத்தை இனிச் செய்யா வகையில் தம்மைப் பாதுகாத்து, அடுத்த முறையில் நன்காற்றல் வேண்டும் என்னும் நற்பண்புடையனாவதும் உழைப்பாளிக்கு இன்றியமையாதனவாகும். இப் பண்புகளைக் கைக்கொண்டு உழைப்போர்முன், வான்றோய் மலையனைய பேரிடர்கள் வந்து நிற்கும். ‘நற்செயலுக் கன்றே நானூறு இடையூறு. ஆயினும் உண்மை யுழைப்பாளியோ, ஏனையவற்றால் வரும் ‘இன்பம் விழையான்; இடும்பை இயல் பென்பான்; துன்பம் உறுதல் இலன். கருமமே கண்ணாக உழைக்கும் அவன், ‘மெய் வருத்தம் பாரான்; பசி நோக்கான், கண் துஞ்சான்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளான்; செவ்வியருமையும் பாரான்; அவமதிப்பும் கொள்ளான். சுடச் சுடரும் பொன்போல், அவன் உள்ளம் துன்பங்கள் தொடர்ந்து போந்து சுடச்சுட, ஒட்பமும் திட்பமும் பெற்று ஓங்கி யொளிரும். நிலவுலகினும், அவன் புகழே ஓங்கிப் பொன்றாது நின்று நிலவும், அத்துன்பங்களும் ‘எரி முன்னர் வைத்துறு போலக் கெடும்.”

இலண்டன் நகரத்தில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் என்னும் பெருங்கோயில் உலையா வுழைப்பின் உருவுடைப் பயனாகும். அதனை யெடுத்தற்கு முயன்ற சர் கிறிஸ்தபர் ரென் என்பார், கணிதநூல், வானநூல், சிற்பநூல் முதலியவற்றிற் பெரும் புலமையும் வினைத்திட்பமும் உடையர். ஆயினும், அவர் இதனைக் கட்டியமைத்தற்கு முயன்ற காலத்து உளவாகிய இடையூறுகட்கு அளவேயில்லை. உரோம் நகரத்துச் செயின்ட் பீட்டர்ஸ் பெருங் கோயில் போலவே இக்கோயிலையும் எடுத்தல் வேண்டுமென எண்ணி முயன்ற அவர்தம் எண்ணம் துார்ந்து போமாறு, அரசியற் பேரதிகாரிகளும் சமயப் பணியாளரும்