பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

67


விளங்கும். அவற்றை வெளிப்படுத்தல் உங்கள் கடன். ஆற்றலும் உரிமையுமுடைய நீவிர் உழைக்குமிடத்து, எங்கெங்கு முறை பிறழ்ச்சி தோன்றுகின்றதோ, அஃது உங்கள் உயிர்க்கிறுதி பயக்கும் உறுபகையாதலின், அங்கங்கு முறைமையை நிறுவுதல் வேண்டும்; நெல்விளையும் வயலிடத்துப் புல் முளைய விடுவிர்கொல் துரும்பாயினும் விரும்பி பீட்டுமின் பருத்தியின் பஞ்சு காற்றிற் பறக்கும் புன்மைத்தாயினும் விடாது பற்றுமின், ஈட்டுமின்; பாங்குற நூன்மின்; அஃது அற்றம் மறைக்கும் ஆடையாகுமே; "அணியெல்லாம் ஆடையின் பின்.”

உழைப்பிற்கு “ஊறு செய்வன பிறவும் சிலவுள. அவை அறியாமையும், மடமையுமாகும். அறிதற்க்ரிய அமைதி பெற்றும், அறியவேண்டுவனவற்றை அறியவிடாது, மருட்சியும் அச்சமும் பயப்பித்துச் செய்வினை சிதறுவித்தலின், அறியாமை உழைப்பிற்கு ஊறு ஆகும். அறிவுடையோர் அறிவுறுப்பவும், ஆற்றற்குரிய வினையும் உரிமையும் அருகில் இருப்பவும், ஆள் வினைக்கண் கருத்தை இருத்தாது, மடிமைக்கண் மடிந்து கிடப்பித்தலின், மடமையினைத் தகர்த் தெறிதலும் ஆண்மகற்கு அறமாகும். அதனைச் செய்யவேண்டு மென்பது ஆண்டவன் ஆணை. "இன்று", “இப்பொழுது", “இக்கணம்” என்று வழங்கும் காலமே, அதனை அயராது ஆற்றற்கமைந்த அருமைக் காலமாகும். அயர்ந்தவழி இரவு வந்துவிடும்; அக்காலத்தில் எவரும் உறங்குவரே யன்றி உழைத்தலைச் செய்யார்.

எல்லா வகை உழைப்பும் ஏற்றமுடையனவாகும்; அவற்றுள் கையால் உழைக்கும் உழைப்பில் கடவுட்டன்மையுண்டு எனக் கார்லைல் என்னும் பெரியார் கவினக் கூறுகின்றார்; இக்கட்டுரைக்கண் அடங்கிய கருத்துகளை வழங்கிய பெரும் புலவரும் அவரே. உழைப்பு உலகேபோல் பரந்த பண்பினையுடையது; இதன் உயர்வு வீட்டுலகின் உச்சியிலுளது. முதற்கண் உடலிலும், பின் மூளையிலும், முடிவில் உள்ளத்திலும் ஒன்றியுலவிப் பயன் உறுவிக்கும் உழைப்பே, கெப்ளர் கண்ட கோணிலைக் கணக்கும், நியூட்டன் நிகழ்த்திய நெடும் பொருளாராய்ச்சியும், அறிவியற்கலைகளும், ஆண்மைச் செயல்களும் இன்னுயிர் வழங்கி இசை நடும் இயல்பும் யாவும் தோற்றுவித்த ஏற்றமுடையது. ஆதலால், ஆண் கடன் இறுக்கும்