பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

செம்மொழிப் புதையல்


ஆயினும், அன்றெழுந் திசைத்த பொருண்மொழி இன்று மெழுந்து ஈர்கின்றது. அது அன்றிட்ட ஆணையை மேற் கொண்டடங்கிய யான் இன்று விடுத்தல் கூடுமோ? அயராவின்பத்திற்றிளைத்திருந்த அன்றே அவ்வாணையை யேற்ற யான், இளமையும், அதனானாம் இன்பமும் இழந்த இந்நிலையிற் கொள்ளாதொழிதல் முறையோ? ஆகவே, என் அருமைச் செல்வங்களே! அவ் அறியாவுலகம் யாண்டமைந் திருப்பினும் இருக்க. நாம் அனைவரும் அதனைநோக்கிச் செல்வம். வம்மின் யான் கூறுவது உண்மையே என்னும் உறுதிநோக்கங் (Faith) கொண்டு ஒருப்படுமின்’ என்றது.

என்றலும், “நீயும் எம்மொடு வருதியன்றே. ஆயின், யான் இன்னே வருவல்” என்று மிகச்சிறியதோர் பார்ப்பு விளம்பித் தன் தாயிசைத்த தனியிசையிற் றானுங் கலந்து பாடல் தொடங்கிற்று.

இன்னணம், சொல்லாடலாலும் இசையாலும் பொழுது கழிய, “வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ்சோலை தாழ்ந்து நிழற்செய்யவும், தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்குபெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்’ மாலை வந்தது. வரக்கண்ட தாய்ப்புள், தன் பார்ப்புக்களைத் தமித்துவிட்டு இரைதேடுவான் சென்றிருப்ப, அவற்றுளொன்று அண்மையிலோடிய அருவியின் மருங்குநின்ற புதற்கணமர்ந்து, அருவியின் கலிப்பும், அடைசினை யசைதலி னெழு மார்ப்பும் கேட்டலும் களிமீக்கூர்ந்து, அங்கு மிங்கு மோடியோடித் தன்னல்லிசை கொண்டு இன்னிசை மிழற்றத் தொடங்கிற்று. அக்காலை அது இசைக்க முயன்ற இசைகள் பலவும் இயைபுபடாதொழிய, இறுதியிற் றன்றாய் பாடிய அறியாவுலகவிசையை இயக்கிப்பார்க்க, அது நன்கனம் கைவரவுவந்து அதனையே எடுத்தும் படுத்தும் இனிது பாடிக் கொண்டிருந்தது.

"ஆ! யாழோ! குழலோ!! இன்றேன் பெருக்கோ!!! என்பெலாம் உருக்கும் இன்னிசை மிழற்றவல்லது யாதுகொல்! ஆ! தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் கலியா, நீண்ட