பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

செம்மொழிப் புதையல்


எத்துணை இகழ்ச்சி செய்திருக்குங்கொல்லோ! பிற வாப் பார்ப்புக்கட்குங் கூடமைத்தல் பேதைமை என் றெள்ளியிருக்குங் கொல்லோ! அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம்? நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று" என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ! யாதோ? நிற்க, இச் செய்கைக்கெல்லா மாவதோர் காரணத்தையேனும் ஆராயாது அது செய்தது வஞ்சனையோ? அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது! இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப்பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ? இன்றோ? "இவை யனைத்தும் பொருளில் புணர்ச்சி, கட்டுக்கதை, புலவர் புரட்சி". என்றெல்லாம் பிதற்றிய அம் மடப்புறவையே வினவுமின், அவ்வுள்ளொலி யதனை வஞ்சித்ததோ வென்று. அன்றியும், அச் செம்புள், “செல்வங்காள் எங்கு, ஏன் சேறல் வேண்டுமென்னும் ஆராய்ச்சியின்றி, இன்னே ஒருப்படுமின். இக்காலை யாம் அறிந்திலோமாயினும், மற்றொருகாலை யறிதல் கூடும்" என்றும், "பணிவும் (Obedience) அறிவும் (Faith) பண்பட்டகாலத்தன்றே, மெய்யுணர்வும், பொருணலமும், விளங்கத் தோன்றலும் காட்டப்பெறுதலும் உளவாம்," என்றும் கூறியதனை அப்புறவம் உணரல் முடியாது போலும்!

பின்னர் நாட்கள் சில சென்றன. காரும் கூதிரும் நீங்கின. மழையும் பனிப்பும் மிகுந்தமையின், வரனென்னும் வைப்புப் பற்றிய நல்லிசை, அவற்றிடை, ஏந்திசையும் தூங்கிசையுமாகிப் பின்னர்ச் செப்பலோசையாய், இசைக்குந்தொறும் கேட்டவை மெய்சிலிர்ப்பவும், கண்ணிர் வாரவும், ஊன்கலந்த உயிர்கலந்து, உளங்கலந்து உடலமெல்லாம் உவட்டாநிற்கும் தேன்கலந்து,


  • பணிவு - வாவென வருதலும் போவெனப் போதலும் என்னும் கேள்விப்பயன். அறிவு - நல்லதன்கண் நலனும், தீயதன்கண் தீமையும் காண்டல் கூடும் என்னும் உறுதிநோக்கினைப் பயப்பது.