பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டது. உரை வரையும் பணி அங்கும் தொடர்ந்தது. ஒய்வுக்குப் பிறகு அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் வேண்டியபடி 'திருவருட்பா’ முழுமைக்கும் தெளிந்த நல்லுரை எழுதியிருப்பது, உரையுலகுக்கே உரைகல்லாக விளங்குகிறது.

மாவட்ட ஊர்ப்பெயரும் கல்வெட்டும் குறித்த ஆய்வுக்காக, இந்தியப் பல்கலை நல்கைக் குழு, இவரைப் பேராசிரியராக அமர்த்திக் கொண்டது. அவ்வமயம், தமிழகம் ஊரும் பேரும் குறித்த வரலாற்று ஆய்வுத் தொகுதியைப் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக் குறிப்புக்களோடு பேரறிஞர் ஒளவை உருவாக்கினார். உரையாசிரியர் விரிவுரை வரைவதோடு, மேடையில் உரையாற்றுவதிலும் சிறந்த நாவலராக விளங்கினார்.

ஒளவை துரைசாமி, வடமொழி நாடகமான மத்த விலாசத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து ஒளவைத் தமிழ், மதுரைக் குமரனார், தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப்புலவர் திருவள்ளுவர், நந்தா விளக்கு, சிவஞானபோதச் செம்பொருள், பண்டைச் சேரமன்னர் வரலாறு முதலான நற்றமிழ்க் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘An Introduction to the Study of Tirukkural’ என்னும் ஆங்கில நூலையும் இவர் படைத்தார்.

பேராசிரியர் ஒளவை துரைசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டன. மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலக்கண நுணுக்கம், சிந்தனை வளம், கல்வெட்டுக்களைக் காட்டித் தெளிய வைப்பது முதலிய நலங்களால் இவர் உரையை உலகம் புகழ்ந்தது. ஒளவை மூதாட்டியார் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ எனக் கேட்ட பாடலை நாம் அறிவோம். ஆனால், தமிழுலகம் 'சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று ஒளவை துரைசாமி அவர்களிடமே கேட்டுப் பெற்றது என்று முத்தமிழ்க் காவலரின் வாழ்த்துரை சொல்கிறது.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்ப்பில், தமிழ்த் தொண்டு செய்த பெரியார் என்ற வகையில், ஒளவிை துரைசாமிக்குக் கேடயம் பரிசாக வழங்கியபோது, மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்திருந்து, 'தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு, நீங்கள் வாள் அல்லவா தந்திருக்க வேண்டும். எவரிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்!' என்று முழங்கினார்.