பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

99



எதிர்ப்புகளையும், தொல்லைகளையும் பற்றாக்குறைகளையும் கால நீட்டிப்பையும் கண்டு, சோர்வு கொள்ளாமல், அச்செயலைத் தொடங்கிய அதே ஆர்வத்துட்ன், இன்னுஞ் சொன்னால் மேலும் மேலும் மிகுந்த முனைப்புடனும் உள்ள உறுதியுடனும் உடல் ஊக்கத்துடனும் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கமாகப் பார்ப்போம்.

4. ஒருவந்தம்

ஊக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர், "மனம் மெலிதலின்றி, வினை செய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல்" என்று பொருள் தருகிறார். ஒரு செயலிலோ, நோக்கிலோ உள்ளமானது படிந்து அல்லது பற்றி அதைப் பெயராது அதிலேயே இறுதிவரை உறுதி கொண்டிருப்பதால், அதற்கு ஒருவந்தம் என்றும் ஒரு சொல் திருக்குறளில் ஆளப்பெறுகிறது (563, 593)

ஒரு செயல் முயற்சி கொண்டு உழைக்குங்கால், அதில் ஊதியம் வரவில்லையென்றோ, அல்லது முன்னரே இட்ட முதல் இழந்துவிட்டோமே என்றோ, ஊக்கமுடையவர்கள் துன்பப்பட மாட்டார்கள். மேலும் மேலும் முயற்சி செய்வார்கள்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்

(593)

இதில் திருவள்ளுவர் ஊக்கம், ஒருவந்தம் எனும் ஏறத்தாழ ஒரே பொருளுடைய இரு சொற்களையும் ஒரே இடத்திலேயே கையாள்வது இன்னும் கவனிக்கத்தக்கது. உறுதியை உறுதியாகக் கைக்கொள்ளுபவர் என்று இதற்குப் பொருள். இதைக் கூற வந்தவர், முதல் உறுதிக்கு 'ஊக்கம்' எனும் சொல்லையும் இரண்டாவது உறுதிக்கு, 'ஒருவந்தம்' எனும் சொல்லையும் அமைத்துப் பேசுகிறார்.

இனி, உடல் படிப்படியாக நலம் பெறுதலைத் தேறுதல் என்று சொல்லுகிறோம். இவன் உடல் தேறிவருகிறது என்பது வழக்கு இனி, எவரோ ஒருவரின் மறைவால், மிகுந்த துயரமுற்ற இன்னொருவர் செயலற்று இருக்கும் நிலையை மனமுடைதல் என்று குறிக்கும் நாம், அவர் மீண்டும் ஊக்கம் பெற்று வருவதை மனம் தேறி வருகிறார். என்றும் கூறுகிறோம். இங்கு உடலும் மனமும் தேறி வருவது அல்லது தேறுதல் பெற்று வருவது, ஊக்கம் பெற்று வருவதையே ஆகும். எனவே ஊக்கத்திற்குத் தேறுதல் என்றும் ஒரு சொல் உண்டு.

அன்பறிவு தேற்றம்.

(513)

இங்குத் தேற்றத்திற்கு, மனம் கலங்காத உறுதி என்று பொருள். செயலுக்குரிய ஒருவனைத் தேறும் பொழுது அஃதாவது,