பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

105அங்கிருந்தால் என்ன? வேறு இடத்தில் இருந்தால் என்ன? அந்தக் கல், நாம் நடக்கும் வழியை அடைத்துக் கொண்டு கிடந்தால், அதை அப்புறப்படுத்தலாம். அதனால் பயனுண்டு. மற்றபடி அக்கல் எங்குக் கிடந்தால்தான் என்ன? அதுபோல் கள் குடிக்கின்றவனிடம் உள்ள காசுகள் விற்பவனுக்கு வருகிறது. அதனால் என்ன பயன்? இருவருக்கும் அந்தக் காசால் கெடுதலே வருகிறது. கல் இடம் பெயருகிறது.போலக் காசும் இடம் பெயருகிறது. பயன் என்ன? ஒரு செயல் யாருக்காவது பயன் தர வேண்டும். வெறும் செயலே. பயனாகி விடாது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதில் பெருமையில்லை. அவன் என்ன தொழில் செய்து அதைச் சம்பாதிக்கிறான் என்பதில்தான் பெருமை உள்ளது.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்

கருமமே கட்டளைக் கல்.

(505)

எனவே பெருமையை அளக்கப் பயன்படுவது செயல்தான். செயலை அளக்கப் பயன்படுவது பயன்! பயனுடைய செயலைத்தான் எல்லாரும் பெருமையாகக் கருதுவார்கள். தீமை தருவது பயனாகாது. நன்மை தருவதைத்தான் பயன் என்று கொள்ள வேண்டும். அறிவு ஆக்கத்திற்கும் உலக ஆக்கத்திற்கும், உதவுவதும் அதுதான். அதையே பயன் என்று சொல்வார்கள். அழிவைத் தருவது பயனாகாது.

அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

(461)

என்பார் திருவள்ளுவர். எனவே பயனுடைய செயல்களைச் செய்வதே தக்கது. அதனாலேயே உள்ளம் ஊக்கம் பெறும் இல்லெனின் உள்ளம் ஊக்கமழிக்கும்.உறுதி குலையும் சிறுகும். இறுதியில் அழிந்தே போகும். உள்ளத்தை அழிக்கின்ற செயலை நாம் செய்து ஊக்கத்தை இழந்துவிடக் கூடாது.

11. ஊக்கம் இல்லாதவர்கள்

ஊக்கம் இல்லாதவரை மக்கள் விரும்பமாட்டார்கள். போற்ற மாட்டார்கள் என்று முதலில் கண்டோம். இனி ஊக்கமில்லாதவர்கள் மக்களே ஆகமாட்டார்கள். விலங்குகளுக்குக் கூட அவர்களை இணைவைத்து பேசமுடியாது. பறவைகளுக்கும் அவர்கள் இணையாக மாட்டார்கள். ஏதாவது ஒன்றோடு பொருத்திச் சொல்ல வேண்டுமே என்றால் அவர்கள் நிலைத்திணையாகிய மரம், செடிகொடிகள் முதலிய ஓரறிவு உயிர்களாக இருப்பவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.என்.பார் பேராசான்.

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை, அஃதில்லார்

மரம்;மக்களாதலே வேறு.

(600)