பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

107



ஆனால் ஊக்கம் உறுதிப்பாடு இல்லாதவனாக இருக்கக் கூடாது. உள்ள ஊக்கமும் உடல் உழைப்புமே மாந்தத் தன்மைகள். இந்தத் தன்மைகளே மாந்தனுக்கு உயிரியக்கம் ஆகிறது; எனவே அத்தன்மைகள் இல்லாதவனை உயிருள்ளவன் என்று கூற முடியாது; இருப்பவன் என்றும் கூற இயலாது. இல்லாதவனே அவன்.

உடைய ரெனப்படுவது ஊக்கம்; அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

(591)

என்பது திருக்குறள், ஊக்கம் என்னும் உள்ள உறுதியை ஒருவன் பெற்றிராமல், வேறு, நல்ல உடல், நிறைந்த செல்வம் முதலியவற்றைப் பெற்றிருப்பானாயினும், அவன் இல்லாதவனே, இருப்பவன் ஆகான் என்று அழுத்தந் திருத்தமாக இக்குறள் அறைகின்றது.

12. பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை

உள்ள உறுதியே செல்வம், பிற செல்வங்கள் ஒருவனிடம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்தாலும், அவை அவன்பால் தொடர்ந்து நில்லாமல், படிப்படியே அவனை விட்டு நீங்கி விடும் (592). ஆனால் உள்ள உறுதி இருந்து அதற்குரிய முயற்சி இருந்துவிட்டால், முன்னொருகால் வந்த செல்வத்தை அவர்கள் இழந்து விட்டாலும், அதற்காக அவர்கள் வருந்த மாட்டார்கள்; மீண்டும் அச்செல்வம் வந்து சேரும்படியான ஊக்கத்தை இழந்து போகாமல் அவர்கள் உறுதியுடையவர்களாகவே இருப்பார்கள் (593).

உள்ளத்தில் உறுதியும் அதனால் முயற்சியும் உள்ளவர்களிடம் , செல்வம்தானாக வந்து சேரும் (594) உள்ள உறுதியில்லாதவர்கள் முயற்சியில்லாதவர்களாகையால், அவர்களிடம் செல்வம் வராது; அதனால் அவர் பிறர்க்கு எதையும் தந்து உதவ இயலாது; அவ்வாறு தருவதால் வரும் பெருமையை, புகழைப் பெற முடியாது (598). பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?

திருக்குறளில் ஊக்கம் உடைமை என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து மடி இன்மை சோர்வு - சோம்பல் இல்லாமல் இருத்தல்), ஆள்வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சியோடு இருத்தல் இடுக்கண் அழியாமை துன்பங்களைக் கண்டு அஞ்சாமல், மேலும் மேலும் உறுதியுடையவராய் இருத்தல்) ஆகிய அதிகாரங்கள் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்துத் தன்மைகளும் உள்ள உறுதியை, வேறு வேறு துணை உணர்வுகளைக் கொண்டு வலுப்படுத்தும் கருத்துகளைத் தெரிவிப்பனவாகும். சோம்பலோ, சோர்வோ உள்ளத்தின் உறுதியைக் கெடுத்துவிடும்; எந்தக் காரணத்தாலும் உள்ள உறுதியைத் தளர்வடையச் செய்துவிடக் கூடாது; உறுதியுடன் முயற்சி செய்தால் எதையும் செய்துவிட முடியும். முயற்சிகளுக் கிடையில் எத்தகைய துன்பம் எவ்வளவில் வந்தாலும் அதற்காக உள்ளம் சோர்ந்து விடக்கூடாது;