பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

செயலும் செயல் திறனும்அவை. ஒன்றைப் பற்றிய நன்மை, தீமை, பயன், இழப்பு, பெருமை, சிறுமை ஆகியனபற்றி அறிந்து கொள்ளும் முயற்சி அறிவுழைப்பின் பாற்படும். இனி அறிந்து கொண்ட அறிவைச் செயல்படுத்துவதற்கான முயற்சி உடலுழைப்பின் பாற்படும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு இவ்விரண்டு வகையான உழைப்பும் தேவை. இரண்டு முயற்சிகளையும் ஒருவரே செய்யலாம்; அல்லது தனித்தனியாக இருவரும் செய்யலாம்.

ஒரு செயலைச் செய்வதற்கு முன் அச்செயலைப் பற்றிய அனைத்து. நிலை அறிவையும் ஒருவர் பெற்றிருந்தால்தான் அச்செயலை அவரால் செப்பமாகவும் திட்பமாகவும் நுட்பமாகவும் செய்ய முடியும். செயல் அறிவு வேறு; செயல் திறன் வேறு. ஒரு செயலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவு செயலறிவு. இதை ஆங்கிலத்தில் தியரி (Theory) என்பர். தெரிந்து கொண்ட அறிவைச் செயலாகச் செய்யும்பொழுது செயலாகிவிடுகிறது. இதை ஆங்கிலத்தில் பிராக்டிக்கல் (Practical) என்பர்.

செயலறிவு கல்வியால் அல்லது கேள்வியால் வரும். ஒன்றைச் செய்யத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்குரிய நூல்களைக் கற்க வேண்டும். அல்லது அச்செயலைச் செய்யத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டு வழியாகவும் அல்லாமல் ஒருவர் ஒரு செயலைச் செய்துவிட முடியாது.

3. அறிவு பெறும் ஐந்து வழிகள்

பொதுவாகவே ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவு பெறுவதற்கு ஐந்து வழிகள் உண்டு. அவை காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன. காட்சி என்பது ஒருவர் ஒன்றைக் கண்ணால் கண்டு அறிதல். கேள்வி என்பது ஒன்றைப் பிறர் சொல்லக் கேட்டு அறிதல். உசாவல் என்பது ஒன்றைப் பற்றி ஒருவரிடம் உசாவி (விசாரித்து அறிதல். கல்வி என்பது ஒன்றைப் பற்றி அதன் தொடர்பான நூலைப் படித்து அறிதல். பாடு என்பது, ஒருவர் ஒரு செயலில் நேரடியாக ஈடுபட்டு அறிந்து கொள்ளுதல் இதைப் பட்டறிவு என்றும் சொல்லலாம். ஒரு செயலைப் பற்றிய முயற்சியை ஒருவர், இந்த ஐந்து வகைகளில் ஒன்றின் வழியாகத்தான் தொடங்க வேண்டும். இவற்றுள் எதன் வழியாகவும் ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளாமல், எந்தச் செயலையும் தெரிந்து கொள்ளவும் முடியாது செய்து விடவும் முடியாது. அதைத் திறமையாகச் செய்வதென்பது வேறு செய்தி. அஃது அவர் அறிவையும், கூர்மைத் திறனையும், ஊக்கத்தையும், விடாமுயற்சியையும், பொறுமையையும், மணஞ் சலியாமையையும் பொறுத்தது.

இனி, ஒருவர், மேலே சொல்லப்பெற்ற ஐந்து வழிகளில் ஒன்றின் வழியாக மட்டுமே ஒரு செயலைத் தெரிந்து கொண்டு செய்வது என்பது அத்துணைச் சிறப்பன்று. கண்ணால் காண்பதால் மட்டுமே ஒருவர்