பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

111



ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் அச்செயலும் எளிமையான செயலாகவே இருக்கும்; மண்வெட்டியைப் பிடித்து மண்ணை வெட்டுவது, செடிகளை நடுவது, மரத்தை அறுப்பது போலும் எளிய, அறிவுத்திறன் மிக வேண்டாத செயல்களை ஒருவர், பிறர் செய்வதைக் கண்ணால் கண்டவுடன் செய்யலாம். ஆனால் எல்லாத் தொழில்களையுமே அவ்வாறு செய்துவிட முடியாது. சில தொழில்களைப் பற்றி அவற்றை அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டும் செய்ய வேண்டும். இனி, இன்னும் சில தொழில்களை அவர்கள் சொல்லுவதோடு மட்டும் அல்லாமல் நாம் உசாவியும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் இப்படி ஐந்து வழிகளாகவும் தெரிந்துகொண்ட செயலறிவே, ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்கு உதவும். அந்த வகை எண்ணிக்கைகளின் கூடுதலுக்கும் குறைவுக்கும் ஏற்ற வகையில், ஒருவர் பெறுகின்ற செயல்திறனும் கூடுதலாகவோ குறைவாகவோதான் அமைய முடியும்.

4. மன விருப்பம் தேவை

அடுத்து, ஒருவர் பெற்ற அறிவுத்திறனை ஒட்டிச் செயல் திறன் அமையும் என்றாலும், செயலில் இறங்கியபின் அவரின் உடல் திறனும், உள்ள உறுதியும், அவரின் செயல்திறனுக்கு உந்து விசைகளாக அமைய வேண்டும். செயலறிவு செயலில் ஊன்றுவதற்கு மனஉணர்வு முகாமையானது. மனவிருப்பமின்றி எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. மனவிருப்பமே மன ஊக்கமாகவும் மன உறுதியாகவும் செயல்படும். இனி, செயலறிவும், மன விருப்பமும் அல்லது ஊக்கமும் இருந்தாலும், உடல் அதற்கு ஒத்துழைப்புத் தரவில்லையானால் செயல்திறம் ஏற்பட வழியில்லை.

எனவே, நாம் முன்பே கூறியவாறு, ஒரு செயல் சிறப்புற அமைய வேண்டுமாயின், மேற்காட்டிய ஐந்து வகையானும் பெற்ற செயலறிவும், அதற்கு உந்து விசையாக அமையும் உள்ளத்தின் ஊக்கமும், அவையிரண்டுக்கும் உறுதுணையாக நின்றியங்கும் உடல்திறனும் அல்லது உறுதியுமே ஒரு செயலின் செப்ப, திட்ப நுட்பங்களுக்குக் காரணங்களாக அமையமுடியும் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். இதற்கு ஓர் உவமை கூறவேண்டுமானால், ஒரு பேருந்து இயக்கத்தைச் சொல்லலாம். பேருந்து ஒட்டுவதை ஒருவர் அறிந்திருப்பது செயல்திறம், அதற்குக் கன்னெயாக பெட்ரோலாக இருப்பது உள்ள ஊக்கம். பேருந்து அனைத்துக் கருவிகளுடனும் சரியான இயக்கத்திற்குப் பொருத்தமாக அமைந்திருப்பது உடல்திறன். இந்த மூன்று நிலைகளும் சரியாக இருக்குமானால், பேருந்தும் சரியாக செயல்படுகிறது.

ஆகவே, தாழாது உழைத்தல் என்னும் தலைப்பு ஏறத்தாழ ஒருவரின்