பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

செயலும் செயல் திறனும்உடலியக்கத்தையே வெளிப்படையாகக் குறிப்பு தென்றாலும், அவ்வுழைப்பிற்குப் பின்னால், உள்ளமும், அறிவும் செயல்படுவதைக் கட்டாயம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

5. உழைப்பும் ஓய்வும்

பெரும்பாலும் செயல்கள் அனைத்துமே உடல் இயக்க அடிப்படையிலேயே அமைகின்றன. அறிவு உழைப்பானாலும், உடல் உழைப்பானாலும், அனைத்து முயற்சிகளுக்கும் உடலே களமாக அமைவதால், உடல் நலத்தின் அடிப்படையிலேயே செயல்கள் சிறந்து விளங்குகின்றன. உடல் நலிவுற்றவர் அல்லது நோயுற்றவர் எவ்வளவு அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் அவ்வறிவு செயலாக மலர்வதில்லை.

இவ்விடத்தில் இன்னொன்றை நாம் நன்கு விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். உழைப்பினால் உடல் என்றும் ஊறுபடுவதில்லை. கடுமையான உழைப்பிற்குப் பின்னர் கூட உடலுக்குத் தேவையான ஒய்வெடுத்துக் கொண்டால் உடல் நலம் கெடாததுடன் மேலும் அஃது உழைக்கவும் போதுமான உறுதி பெற்றுவிடுவதைப் பலரும் அறிந்திருக்கலாம். இந்த இயற்கை கூறை அனைவரும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)
தூங்குக தூங்கிச் செயற்பால (672)

என்னும் குறட்பாக்களில் இக்கருத்தும் ஓரளவு உட்பொருளாக ஒலிப்பதைக் காணலாம்.

இவ்வளவும் ஏன் இங்குச் சொல்லப் பெறுகின்றதெனில், செயல் வெற்றிக்குத் தாழாத உழைப்பு என்னும் அடிப்படையில், உடலை அளவுக்கு மீறி வருத்திக் கொண்டு செய்யும் செயல் என்று தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆகும். தாழாமை எனில் காலந் தாழ்த்தாமை, முயற்சியில் குறைவு படாமை என்னும் பொருள்களே கொள்ளப்பெறுவன ஆகையால், ஓய்வில்லாமலேயே உழைத்து உடலை நலிவித்துக் கொள்ளுதல் என்று எவரும் கருதிக் கொள்ளுதல் வேண்டா என்க.

6. முயற்சி முயற்சி, முயற்சி

ஒரு செயலைச் செய்கின்ற முயற்சி பலவகையிலும் தாழ்வுப்பட்டு விடலாம். அதற்குக் காரணம் எடுத்தவுடனேயே வெற்றிக் கிட்டாமை, எதிர்ப்புகள் சூழ்தல், பொருள் இழப்பு, உடல் நலிவு, வரவேற்பின்மை, அருமையுடைமை துன்பம் சூழ்தல் முதலியவை ஆகும். எனினும், இந்நிலைகளிலெல்லாம் அறிவானும், மனத்தானும் உடலானும் உறுதி